அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை எடப்பாடி, ஓபிஎஸ் நேரடி மோதல்: பேரவையில் பரபரப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், காவல் மற்றும் தீயணைப்பு துறை மானிய கோரிக்கை மீது பொள்ளாச்சி ஜெயராமன்(அதிமுக) பேசியதாவது: தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை, ஜூலை மாதம் ஒரு வன்முறை கூட்டம் சூறையாடியது. அதற்கு முன்தினம் தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நாங்கள் காவல் துறையில் மனு அளித்து இருந்தோம்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி(அதிமுக): பிரதான எதிர்க்கட்சி அதிமுக. 43 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி. எங்களின் தலைமை கழகத்தை வேண்டுமென்றே திட்டமிட்டு சிலர் தாக்கினர். இந்த சம்பவம் நடக்கும் என்றே கணித்து முன்கூட்டியே நாங்கள் புகார் கொடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதைத் தான் உறுப்பினர் குறிப்பிட்டு பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலின்: இது அதிமுக உட்கட்சி விவகாரம். கட்சி அலுவலகத்துக்கு உள்ளே நடந்த சம்பவத்துக்கு காவல் துறை பொறுப்பு ஏற்க முடியாது. அதே நேரம் வெளியில் பாதுகாப்பு கொடுத்தோம்.
எடப்பாடி பழனிசாமி: திமுகவில் உட்கட்சி மோதல் நடந்தபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: நாங்கள் உங்களை போல அடித்து கொள்ளவில்லை.
ஓ.பன்னீர்செல்வம்(அதிமுக): அன்று நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. நாங்கள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு நிராயுதபாணியாக சென்று கொண்டிருந்தோம். கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே, ஒரு கும்பல் எங்கள் வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியது. தலைமை அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளே 300 பேர் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொண்டு இருந்தனர். அன்று நடந்த வன்முறை வெறியாட்டத்தை அரசும், போலீசும் விசாரித்து கொண்டு இருக்கிறது. யார் அத்துமிறீனார்கள்? வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தமிழக மக்களுக்கு தெரியும். இதுகுறித்து தனியாக மேடை போட்டு பேசவும் தயாராக இருக்கிறேன். பொது குழு நடந்து கொண்டிருந்த போது, அங்கு செல்லாமல் 8 மாவட்ட செயலாளர்கள் தலைமை அலுவலகத்தில் உட்கார்ந்து இருந்ததற்கு என்ன அவசியம் அப்போது ஏற்பட்டது?

எடப்பாடி பழனிசாமி: ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். முறையாக பாதுகாப்பு அளித்து இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து இருக்காது. தலைமை அலுவலகம் சென்ற கும்பல் அங்குள்ள பல பொருட்கள் திருடி சென்றுள்ளனர். முறையாக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. இது குறித்து போலீசார், அரசும் விசாரித்து உள்ளே வந்தவர்கள் யார் என்பதை பதிவு செய்துள்ளது. வழக்கும் பதிவு செய்து, நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. முறையாக பாதுகாப்பு அளித்திருந்தால் பொருட்கள் திருட்டு போயிருக்காது. இப்படி சம்பவம் நடந்திருக்காது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்த பிரச்னை குறித்து போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றமும் விசாரித்துள்ளது என்று எதிர்கட்சி தலைவரே தெரிவிக்கிறார். இருப்பினும், 11.7.2022ம் தேதி நடந்த சம்பவம் குறித்து 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக கூறுவது. உண்மைக்கு மாறான செய்தி.
இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பேரவையில் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் சற்று நேரம் பேரவையில் பரபரப்பு காணப்பட்டது.

The post அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை எடப்பாடி, ஓபிஎஸ் நேரடி மோதல்: பேரவையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: