ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் கால்வாயாக மாறிய ஆறு

தொண்டி: தொண்டி பேருராட்சியில் ஓடும் மணிமுத்து ஆறு தொண்டியின் பல்வேறு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சாக்கடை கால்வாய் அளவு குறுகி உள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் கடலில் சேர முடியாமல் பல்வேறு பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது.தொண்டி முதல் நிலை பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் வார்டு எண் 2 சின்னத்தொண்டி கிராமத்தை உள்ளடக்கிய பகுதியில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்பாசன கண்மாயின் உபரிநீர் வெளியேறும் பிரதான கால்வாயான மணிமுத்தாறு தொண்டி வருவாய் கிராமத்தின் மையப்பகுதியின் வழியே சென்று கடலில் கலக்கின்றது. இந்த மணிமுத்தாறு தொண்டி பேரூராட்சியில் நுழைவதில் இருந்து சர்வே எண்(64முதல் 102வரை) மொத்தம் 1463 மீட்டர் நீளம் கொண்டது. அகலம் இடத்திற்கு இடம் தகுந்தாற் போல் 50மீட்டருக்கு மிகாமல் உள்ளது. இந்த ஆறு தற்போது தொண்டியின் மையப்பகுதியில் 10மீட்டர் அகலம் கூட இல்லை. ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. தற்போது இந்த ஆற்றின் நிலைமை பொதுமக்களால் உபயோகித்து செல்லும் கழிவுநீர் (சாக்கடை) ஓடக்கூடிய பகுதியாகத்தான் இருக்கிறது.

தண்ணீர் சீராக ஓடாமல் ஆக்கிரமிப்பால் தடைபட்டு தடைபட்டு ஆங்காங்கே தேங்கி பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து கொண்டு உள்ளது. இதனை சுற்றி உள்ள பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இது சம்பந்தமாக புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை.அதிகாரிகள் இந்த மணிமுத்தாற்றை போர்க்கால அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சுத்தம் செய்து தங்குதடையின்றி ஓடவும் ஆற்றின் ஓரத்தில் தடுப்பு சுவர் கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.மழை காலங்களில் சுற்றுவட்டாரத்திலிருந்து வரும் தண்ணீர் முழுவதும் மணிமுத்தாறு வழியாகத்தான் கடலில் சென்று கலக்கும். சில வருடங்களாக ஆக்கிரப்பு அதிகரிப்பால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்ப்பட்டு அனீஷ் நகர், நரிக்குடி, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து இப்குதி மக்கள் பெரும் அவதிப்பட்டனர். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வருவதும் பார்வையிடுவதும் தொடர்கதையாக உள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்ற எவ்வித நடவடிக்கையும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகமும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் ஆற்றை அளக்கும் பணியில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் கலந்தர் ஆசிக் கூறியது, மணிமுத்து ஆறு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பேரூராட்சி முதல் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பல முறை மனு கொடுத்துள்ளோம் எவ்வித பயனும் இல்லை. தற்போது தமிழக முதல்வருக்கு நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆறு குறித்த முழு தகவலையும் அனுப்பியுள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் கால்வாயாக மாறிய ஆறு appeared first on Dinakaran.

Related Stories: