மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் சென்னை-சேலம் இடையே தினமும் நேரடி விமான சேவை: இன்று முதல் தொடக்கம்

சென்னை: சென்னையில் இருந்து சேலம் நகருக்கு ட்ரூஜெட் தனியார் பயணிகள் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. கொரோனா காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் சென்னை- சேலம்- சென்னை விமான சேவைரத்து செய்யப்பட்டது. தற்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னை- சேலம்- சென்னை இடையே தினசரி விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது. அதன்படி, இன்று (29ம் தேதி) முதல் விமான சேவை தொடங்குகிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் காலை 11.20 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பகல் 12.30 மணிக்கு சேலம் விமான நிலையம் சென்றடைகிறது. அதன் பின்பு அதே விமானம் சேலத்தில் இருந்து பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு பகல் 1.45 மணிக்கு வருகிறது. சேலம் விமான நிலையத்தில், பெரிய விமானங்கள் இறங்குவதற்கு, இன்னும் வசதிகள் செய்யப்படாததால், ஏடிஆர் எனப்படும் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானம் மட்டுமே இயக்கப்பட உள்ளது.சென்னை -சேலம் இடையே ஒரு வழி பயண கட்டணம் குறைந்தது ரூ.2,390. பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்ப கட்டண விகிதத்தில் சிறிதளவு மாற்றம் இருக்கும்.

The post மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் சென்னை-சேலம் இடையே தினமும் நேரடி விமான சேவை: இன்று முதல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: