மண்ணிவாக்கம் ஊராட்சியில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: மண்ணிவாக்கம் ஊராட்சியில், ஒன்றிய தொடக்க பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சியில், மண்ணிவாக்கம், மண்ணிவாக்கம் விரிவு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், சுவாமி விவேகானந்தர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.76.10 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதேபோல், மண்ணிவாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் கூடிய 6 வகுப்பறைகள் ரூ.69 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.

இதில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் துணை தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுமதிலோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மண்ணிவாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமிசண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில், எம்எல்ஏக்கள் செல்வபெருந்தகை, கருணாநிதி, வண்டலூர் தாசில்தார் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வண்டலூர் முத்தமிழ்செல்விவிஜயராஜ், நெடுங்குன்றம் வனிதாஸ்ரீசீனிவாசன், முன்னாள் தலைவர்கள் மண்ணிவாக்கம் லோகநாதன், கீரப்பாக்கம் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post மண்ணிவாக்கம் ஊராட்சியில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்: அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: