சாதிக்க உயரம் தடையில்லை!

நன்றி குங்குமம் தோழி

3.2 அடி உயரம் மட்டுமே கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்த்தி டோக்ரா. இவர் உத்ரகண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தவர். ஆர்த்தியின் தந்தை கர்னல் ராஜேந்திர டோக்ரா. ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். தாயார் கும்கும் டோக்ரா, பள்ளி முதல்வராக பணி செய்தவர்.

ஆர்த்தி டோக்ரா பிறந்து வளரத் தொடங்கும்போதே வளர்ச்சி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆர்த்தியால் இயல்பான பள்ளியில் படிக்க முடியாது எனச் சொல்லி, சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத ஆர்த்தியின் பெற்றோர், அவரை டேராடூனில் உள்ள பொதுப் பள்ளியில் சேர்த்துள்ளனர். வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் மேல்நிலை கல்வியை முடித்த ஆர்த்தி, கல்லூரி படிப்பிற்காக டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இணைந்து பொருளாதாரம் படித்திருக்கிறார். மீண்டும் தனது முதுகலை படிப்பிற்காக டேராடூன் வந்த ஆர்த்தி, ஐ.ஏ.எஸ். அதிகாரியான மனிஷாவை எதிர்பாராமல் சந்தித்திருக்கிறார்.

ஆர்த்தி டோக்ராவின் ஆழ்ந்த அறிவை உணர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மனிஷா, நீங்கள் ஏன் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத முயற்சிக்கk கூடாது? எனக் கேட்டுள்ளார். மனிஷாவின் இந்தக் கேள்விதான், தான் ஐ.ஏ.எஸ். ஆனதற்கு காரணமாக இருந்தது என பின்னாளில் நினைவுகூறுகிறார் ஆர்த்தி டோக்ரா.யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகும்போது அதிகாரிக்கே உரிய கம்பீரம், தோரணை குறித்தெல்லாம் சற்றும் கவலைப்படாமல் தேர்வெழுதி, முதல் முயற்சியிலேயே வெற்றிப் பெற்றதுடன், அகில இந்திய அளவில் 56வது இடத்தைப் பிடித்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார்.

தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய பொறுப்புகள் பலவும் ஆர்த்திக்கு வழங்கப்பட்டது. முதன்முறையாக மாநில விநியோக அமைப்பான Discom நிர்வாக இயக்குநராக ஆர்த்தி பணியமர்த்தப்பட்டார். பணிசெய்யும் இடங்களிலெல்லாம் தனது தனி முத்திரையை பதிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்பிறகு பல்வேறு பொறுப்புகளையும் வகிக்க ஆரம்பித்தவர், மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தைகளை தத்தெடுக்கவும் மருத்துவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஜோத்பூர் மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட ஆர்த்தியை ராஜஸ்தான் மாநில அரசு 2013ல் அஜ்மீர் மாவட்ட ஆட்சியராக பணி மாற்றம் செய்தது. கலெக்டர் மாற்றப்பட்டது குறித்து தகவல் பரவ, அதை எதிர்த்து ஜோத்பூர் மக்கள் மாவட்ட அலுவலகத்தில் குவிந்தனர். ஆட்சியரைச் சந்தித்து இங்கிருந்து நீங்கள் போகக் கூடாது எனவும் கோரிக்கை வைத்தனர். அரசுப் பணியில் இதுவும் ஓர் அங்கம்தான் என்ற ஆர்த்தி, மக்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினார்.

அஜ்மீர் மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை தேடித்தேடி செய்ததன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் ஆர்த்தி டோக்ராவை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கத் தொடங்கினர். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலின்போது அஜ்மீரில் மாவட்ட தேர்தல் ஆணையராகவும் ஆர்த்தி பணியாற்றினார். அப்போது மாற்றுத் திறனாளிகளும் வாக்களிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்துவந்த ஆர்த்தி, வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர் மற்றும் சிறப்பு வாகன வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இதனால் பதினேழு ஆயிரம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கே வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். ஆர்த்தி டோக்ராவின் இந்த செயல் இந்தியா முழுவதும் கவனம் பெற்று, பலரையும் இவரை திரும்பிப் பார்க்க வைத்தது.

2018ல் அஜ்மீர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஆர்த்திக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதளித்து கவுரவப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் ராஜஸ்தான் மாநிலத்தின் Daughters are Precious Award ஆர்த்திக்கு வழங்கப்பட்டது.தான் ஆட்சியராகப் பணியாற்றிய மாவட்டங்களில் சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார் ஆர்த்தி. அப்போது பொதுவெளியில் மலம் கழிக்கும் மாவட்டமாக அஜ்மீர் மாவட்டம் இருந்தது. இதை கவனித்தவர், திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பெண்களுக்கான பிரச்னைகள் குறித்தும் வீடுவீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கி, பின்னர் அரசு அதிகாரிகளையும் இந்த விழிப்புணர்வு பரப்புரை பணியில் பங்கேற்க வைத்தார்.

திறந்த வெளியில் மலம் கழிக்கும் 219 கிராமங்களை அடையாளம் கண்டு, பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சிமென்டுடன் சேர்ந்து உருவாக்கப்பட்ட புக்கா கழிவறைகளை பல்வேறு இடங்களில் உருவாக்கிக் கொடுத்தார். அஜ்மீரில் 800 புக்கா கழிவறைகள் கட்டப்பட்டன. மேலும் கிராம மக்கள் கழிவறை கட்டுவதற்குத் தேவையான நிதியினை மாவட்ட நிர்வாகம் தங்கு தடையின்றி வழங்கவும் ஏற்பாடு செய்தார். இதனால் அஜ்மீர் மாவட்டத்தின் குடிசைப்பகுதியில் வசிக்கும் குடும்பத்திற்கும் புக்கா கழிவறை கிடைத்தது.

வட இந்திய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசு பிரதிநிதிகளும், ஆர்த்தியின் புக்கா கழிவறை திட்டத்தை பார்த்து, தங்கள் மாநிலங்களிலும் அதை செயல்படுத்த தொடங்கினர். இத்திட்டம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவே தாய்லாந்து, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்தும்கூட அஜ்மீர் மாவட்டத்திற்கு அதிகாரிகள் வரத்தொடங்கினர். இதன் காரணமாக ஆர்த்தி டோக்ரா இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் கவனம் பெறத் தொடங்கினார்.சாதிக்க உயரம் தடையில்லை எனத் தொடர்ந்து செயல்படும் ஆர்த்தி டோக்ராவின் நம்பிக்கையும் உழைப்பும் உலக அளவில் பலரையும் அவரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post சாதிக்க உயரம் தடையில்லை! appeared first on Dinakaran.

Related Stories: