அபிராமி அந்தாதி: அபயம் நல்கும் ஆதி அன்னை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தங்குவர்‌ கற்பகத்‌ தாருவின்‌ நீழலில்‌; தாயார்‌இன்றி
மங்குவர்‌ மண்ணில்‌ வழுவாப்‌ பிறவியை மால்வரையும்‌
பொங்குவர்‌ ஆழியும்‌ ஈரேழ்‌ புவனமும்‌, பூத்தஉந்திக்‌
கொங்கிவர்‌ பூங்குழலாள்‌ திருமேனி குறித்தவரே.

– எழுபத்தி ஐந்தாவது அந்தாதி

“ஆதியாக”

இந்த பாடலை நாம் படிப்பதற்கு முன் பூமாதேவியை பற்றியும், அவளை வழிபடுவதைப் பற்றியும், முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த பூமாதேவியின் வழிபாட்டில் எல்லை தேவதைகள் மற்றும் மலைகள், ஏழு கடல்கள், மகாவிஷ்ணு, முதலியோர் பூசிக்கப்படுகிறார்கள். அந்த குறிப்புகளையெல்லாம் இந்தப் பாடலில் மறைமுகமாகப் பதிவு செய்திருக்கிறார். இது ஒரு ஆகம செயல்பாட்டு பூசனை விளக்கமுறைப் பாடல். இப்பாடலின் பொருள் புரிந்து வழிபாடு செய்வது என்பது சிவாகமத்தில் `மிருத் சங்கிரஹநம்’ என்ற பூசனை விதிப்பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

அந்த பூசனை முறை விளக்கத்தையே நான்கு வரிகளில் வெளிப்படுத்தி உள்ளார். மேலும், எமனின் தாயாகிய இவள் எமனின் சம்ஹாரத்திற்கு பிறகு மக்கள் இறக்காததால் ஏற்பட்ட பூமி பாரத்தால் சிவபெருமானை வேண்ட அவர் பூமாதேவிக்கு அருள் செய்ய எமனை மீண்டும் எழுப்பினார் என்கிறது திருக்கடையூர் தலபுராணம். அவளை வணங்குவது என்பது இவ்வுலகத்தில் அனைத்தையும் தரும். அருள்பெற இனி பாடலுக்குள் நுழைவோம்.

“அந்தாதி பொட்சொல் வரிசை”
தங்குவர்‌ கற்பகத்‌ தாருவின்‌ நீழலில்‌;
தாயார்‌இன்றி மங்குவர்‌
மண்ணில்‌ வழுவாப்‌
பிறவியை
மால்வரையும்‌
பொங்குவர்‌ ஆழியும்‌
ஈரேழ்‌ புவனமும்‌, பூத்தஉந்தி
கொங்கிவர்‌
பூங்குழலாள்‌ திருமேனி குறித்தவரே

இவ்வரிசையின்படி பாடலின் விளக்கத்தை இனி காண்போம்.

“தங்குவர் கற்பக
தாருவின் நீழலில்’’

“தங்கு + உவர்” என்று பிரித்தும் “தங்குவர்” என்று இணைத்தும் பொருள் கொள்ள வேண்டும். “தங்கு’’ என்ற சொல்லை நீண்ட ஆயுளுடன் இப்பூமியில் வாழ்வதை குறிப்பிடுவதற்கு பயன்படுத்துகின்றார். “உவர் கற்பக தரு’’ என்பதனால் உவர் நிலத்திலே வளரக்கூடிய ஒரு வகை மரம். இந்த மரமானது பூவுலகத்தில் கல்பதரு எனப்படுகிறது. கல்பதரு என்பது ஒரு வடச்சொல்லாகும். இது தேவர் உலகத்தில் இருக்கும்.

தேவர் உலகத்திற்கு சென்ற ஆன்மாக்கள் வாழ்வதற்கு உண்டான அனைத்து நலன்களையும் செய்யும் நினைத்ததை நினைத்தபடியே அனுபவிக்க செய்யும் வல்லமை படைத்தது. அபிராமிபட்டர் சாத்திரங்களின் துணை கொண்டு தானே உருவாக்குகிறார். இச்சொல்லை இதே போல பூலோகத்தில் வாழும் ஆன்மாக்களுக்கு அவர்கள் நினைத்த அனைத்தையும் சாதித்து தருவது இந்த “உவர்கல்பதரு”இதை தந்திர சாஸ்திரங்கள் துளசி, தர்ப்பை, நெல், பில்வம், அரசமரம் இவற்றை பூவுலக கல்ப தருவாக குறிப்பிடுகிறது. இதையே ஆகம நூலானது ‘பில்வ மூலே, துளசி வனே, கேதாரே, தர்பமுலேசா, அஸ்வமூலே’ என்று இந்த ஐந்தின் கீழ் உள்ள மண்ணையே சிறப்பாக மிருத் சங்கிரஹனத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்கிறது சாத்திரம்.

இவ்வைந்தின் நிழல்படும் இடமான பூமியையே “தாருவின் நீழலில்’’ என்ற சொல்லால் உணர்த்துகிறார். “தாரு’’ என்பது வடசொல்லை பொறுத்தவரை செடிகளையும் குறிக்கும், மரங்களையும் குறிக்கும். இந்த நுட்பத்தை செடி, மரம் என்று தமிழிலே குறிப்பிடாமல் “தாரு’’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். துளசி, தர்ப்பை, நெல், இவை செடி வகையைச் சார்ந்தது. பில்வம், அரசமரம் இவையாவும் மரவகையைச் சார்ந்தது. இதை சூட்டவே அபிராமிபட்டர் “தாரு’’ என்ற வடசொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஐந்தும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. துளசி – அளவிடற்கறிய பெருமையையுடைய விஷ்ணுவின் சக்தியாகும்.

தர்ப்பை – ப்ரம்மாவின் அம்சமான வேள்வி தவத்தை சிறப்பிக்க செய்வது.நெல் – பண்டைய காலத்தில் நெல் பணமாக கருதப்பட்டது. அதை கொடுத்தே அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்வர். பூமாதேவி இதற்கு அதிதேவதை. அவள் கையில் நெற்கதிரை அமைக்க வேண்டும் என்கிறது சிற்ப சாத்திரம். இலக்குமியின் பிரியமான இடமாகவும், சிவனின் நிலைத்து நிற்கும் இடமாகவும் உள்ளது. சர்வ பாவத்தையும் போக்க வல்லது என்பதனால் அறியலாம்.

அரசமரம் மரங்களுக்கு எல்லாம் ராஜாவாக திகழ்வது ராஜவிருக்ஷம். இதில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே தங்கள் மனைவியுடன் வசிக்கிறார்கள். குழந்தைகள் இல்லாதவர்கள் இதை வணங்குவார்கள். இதைதான் “தங்குவர் கற்பக தாருவின் நீழலில்’’ என்கிறார்.

“தாயார் இன்றி மங்குவர்’’

இப்பாடலின் இந்த வரியை புரிந்துகொள்ள சாக்த உபாசனையில் ஒரு தந்திர சாத்திரத்தை புரிந்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக, சைவ வகையில் இல்லாமல் அசைவ வகையில் வணங்கப்படும் ஏழு தேவியார்களை முதலில் புரிந்து கொள்வதே இவ்வரியை உணர்ந்து கொள்ள உதவியாய் அமையும். காட்டேரி, பேச்சியம்மன், பெரியநாயகி, சப்தகன்னி, சப்தசதி, சப்தமாதா, பூமாதேவி என்ற இந்த எழுவரையும் பற்றி அறிந்துக் கொள்வதின் சாராம்சத்தை கூறுகிறது இவ்வரி. இனி ஒவ்வொன்றாய் காண்போம்.

காட்டேரி

மானிடப் பிறப்பை கொடுக்கக் கூடியது. ஆசையை வளர்க்கக் கூடியது. உபாசகன் கொடுக்கும் பலியை ஏற்று, கேட்ட வரத்தை கேட்டபடியே கொடுக்கக் கூடியது.

சப்தகன்னி

அஸ்தி, சுக்லம், மாமிசம், மஜ்ஜா, சர்மம் போன்ற உடலின் தாதுக்களை காத்து இளமையை தக்க வைப்பது.

பூமாதேவி

இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், பிரம்மா, விஷ்ணு என்ற பத்து திசை தேவதைகளின் காவலினாள் அடக்கி புறத்திலிருந்தும் அகத்திலிருந்தும் தோன்றும் வியாதி, பகை நீக்கி உணவை தோற்றுவிப்பது.

சப்தசதி

ப்ருந்தா, அகல்யா, அருந்ததி, சீதா, தாரா, திரௌபதி, தாருகாவனத்து ரிஷி பத்தினி இவர்கள் ஏழுவரையும் வணங்குவதால், நீண்ட ஆயுளைப் பெறலாம்.

சப்தமாதா

ப்ராமி, வைஷ்ணவி, ரௌதிரி, கௌமாரி, வாராகி, காளி, சாமுண்டி என இந்த எழுவரையும் வணங்கினால் உலகியல் அறிவில் சிறந்து விளங்குவார்.

பெரியநாயகி

தாக்ஷாயணி தன் உடலை தக்ஷயக்ஞத்தில் நீக்கிய பின்னும் இமவான் என்ற மலையரசனுக்கு மகளாகப் பிறப்பதற்கு முன்னும் இடைப்பட்ட நிலையிலே இருக்கின்ற உமையம்மையின் வடிவத்தை ப்ருகன்நாயகி என்பர். இதை தமிழில் பெரியநாயகி, பெரியாண்டவர் என்ற பெயரில் அழைப்பர். இவள் யுத்த களத்தில் வணங்கப்படுபவள். இறந்த வீரர்களுக்கு வீர சொர்க்கத்தை வழங்குபவள். தன்னை வணங்குவோரின் எதிரிகளை வெகுவிரைவில் அழிப்பவள்.

பேச்சியம்மன்

அசுரன் ஒருவன் தனக்கு ருத்ரனே மகனாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்து வரம் பெற்றான். அவ்வரத்தினால் ருத்ரன் அசுர வம்சத்தில் பிறந்ததால், அந்த வம்சம் அழியாது. உலகில் அறம் நிலைக்காது என்பதை உணர்த்த மகாவிஷ்ணு அப்பிறவியை தவிப்பதற்கு அவள் கருவுற்றதிலிருந்து காத்திருந்தார். பிரசவ காலத்தில் மகாவிஷ்ணு வானவர் தாதியைப் [நர்ஸ்] போல் வேடமிட்டு பிரசவம் பார்க்க உள்ளே சென்றார்.

அந்த கருவுற்ற அரக்கியை அழித்து அவள் கணவனையும் கொன்று கருவிலிருந்து எடுத்த குழந்தையை காதிலே அணிகலனாக அணிந்து கொண்டார். இந்த தோற்றத்தையே பேச்சியம்மன் என்பர். இந்த பேச்சியம்மனை தியானம் செய்தால், இறந்த ஆன்மாக்கள் மறுபடி பிறப்பு, இறப்பு இரண்டுமின்றி முக்தி அடையும்.

இந்த விஷ்ணுவடிவான உமையம்மை பூமாதேவி, காட்டேரி, சப்தகன்னி, சப்தமாதா, சப்தசதி, பெரியநாயகி இந்த அறுவரும் பேச்சியம்மனுக்கு கீழ்படிந்தவரே. இவர்களை “வாமாச்சாரம்’’ என்ற வழிபாட்டு முறையில் சைவத்தினால் விலக்கப்பட்ட மது, மச்சியம், மாமிசம், குக்குடம் போன்ற பலி பொருட்களை முதன்மையாகக் கொண்டு வழிபாடு செய்தால் பிறப்பு, உடல் வளம், ஆரோக்கியம், புத்தி, எதிரிகளின் அழிவு இவற்றைப் பலனாகப் பெறலாம்.

அதே சமயத்தில் சைவமான முறையில் வழிபாடு செய்தால், இவர்களே பிறப்பை தவிர்த்து ஆன்மாக்கள் முக்தி அடைய உதவுவார்கள். இவர்கள் பலப்பட்டால் உடல் வளமும், பலவீனப்பட்டால் உயிர் வளமும் ஞானத்தையும் வழங்க வல்லவர்கள் அபிராமிபட்டர் இவர்களை வணங்கிய குறிப்பே `வீணே பலி கவர் தெய்வங்கள் பாற் சென்று மிக்க அன்பு பூனேன்’ (64) என்பதனால் பிறவியை அழிக்கவே வணங்குகிறார்.

இதில் அறுவரும் ஒன்றிணைந்தவர்களே ஆனால், இப்பாடலைப் பொருத்தவரை அறுவரையும் இணைத்து “தாயார் இன்றி’’ என்ற வார்த்தையால் அறுவரையும் அடக்கியாளும் பேச்சியம்மனை, “மங்குவர்” என்ற வார்த்தையாலும் எழுவரையும் சேர்த்து “தாயார் இன்றி மங்குவர்’’ என்று உபசரிக்கும் உபாசகனுக்கு இப்பிறவியில் ஞானத்தையும், மோட்சத்தையும் தருவதையே “தாயார் இன்றி மங்குவர்’’ என்று குறிப்பிடுகிறார்.

மேலும், பிறவாமையைக் குறிப்பிடுகிறார். ஆன்மாக்கள் பிறப்பினால் உடலை எடுக்கும் இறப்பினால் உடலை நீங்கும் இடையில் உள்ள வாழ்வினால் அறிவைப் பெறுவதற்கும் உரிய பண்பை உடையது. பிறப்பு இறப்பு இருக்கும்போது முக்தியை அடைய இயலாது. முக்தி என்பது பேரமைதியுற்ற என்றும் நிலைத்த பிறவிப்பிணி இல்லாத ஆன்மாவின் ஆரோக்கியப் பண்பு அந்த பிறவிப் பிணியை நீக்கிக் கொள்ளவே ஆன்மாவானது பதினான்கு உலகில் உடல் எடுத்து வசித்து இறந்து உழல்கின்றது.

இதை நீக்கிக் கொள்ள உண்டான ஒரே மருந்து அபிராமி என்னும் `அருமருந்தே’ (24), மேலும், `ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய்’ (7) என்பதனால் பிறக்கும்போதும், இறக்கும்போதும், வாழும்போதும் மிகுந்த துன்பத்திற்கு உண்டாகிறது ஆன்மா. அதை நீக்கிக் கொள்ளவே எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கிறது. அவ்வகை முயற்சியில் எதைச் செய்தாலும், கர்மா வளர்ந்து அல்லது தேய்ந்து அடுத்த பிறவிக்கு வித்திடுகிதே அன்றி அந்த நோய் முழுவதுமாய் தீர்ந்த பாடில்லை கர்மாவே [வினையே] பிறவிக்குக் காரணம். உடலே கர்ம வடிவம். கர்மமே உடல் `தேகப் பிராரப்த்தம் மேவோக்தம் பிராரப்த்தம் தேஹம் மேவஹி’ என்ற ஆகம வசனத்தால் இதை அறியலாம்.

இந்த கர்மாவானது சஞ்சிதம் [நிகழ்வினை] பிராரப்த்தம் [செல் வினை] ஆகாம்யம் [வருவினை] என்ற மூன்றாக இருக்கிறது. அதில் அனைத்து முயற்சியினாலும் செல் வினை, நிகழ்வினை ஒழித்தாலும் வருவினையை ஒழிக்க இயலாது. அதை பூமாதேவியாகிய உமையம்மையே அழிக்க முடியும். `பாவங்கள் எல்லாம் தீரும் வரை சாக வைக்காதே செத்த பின்னே மீண்டும் இங்கே பிறக்க வைக்காதே’ என்ற குறிக்கோளில் பிறக்காமல் இருக்க முயற்சி செய்யவேண்டும் என்கிறது சாத்திரம்.

நீண்ட ஆயுள் இருப்பதனால், செல் வினையை அனுபவித்து நிகழ்வினை குறைத்து வருவினை ஒழிப்பதற்கு நீண்ட ஆயுளைப் பெற்று வருவினையை கூடுதலாகப் பெற ஆயுளை ஒழித்து முக்தியைப் பெற இயலும். பக்தர்கள் கூடுதலாக ஆயுளைப் பெற்று மோட்சமடைவதையே அதாவது வரும் பிறவிக்கு தாய் இல்லாமல் போவதையே “தாயார் இன்றி மங்குவர்” என்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

The post அபிராமி அந்தாதி: அபயம் நல்கும் ஆதி அன்னை appeared first on Dinakaran.

Related Stories: