×

இடஒதுக்கீடு கோரி பாமக போராட்டம் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கையாக 436 பேர் கைது

விழுப்புரம், டிச. 2: தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமகவினர் போராட்டத்தை துவக்கியுள்ள நிலையில், விழுப்புரம், கடலூரில் முன்னெச்சரிக்கையாக 436 பேர் கைது செய்யப்பட்டனர்.வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று முதல்கட்ட போராட்டமாக, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், இப்போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக.வினர், வன்னியர் சங்கத்தினர் சென்னைக்கு வாகனங்களில் புறப்பட்டுச்சென்றனர். அவர்களை வழியில் தடுத்து நிறுத்தி போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சென்னைக்கு செல்லும் சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னைக்கு செல்லமுயன்ற பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். அதன்படி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று 130 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டம் மற்றும் நாகை, காரைக்கால், தஞ்சாவூர், கும்பகோணம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடலூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு பாமகவினர் செல்ல முயன்றனர். மாவட்ட எஸ்பி அபிநவ் மேற்பார்வையில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர், மங்கலம்பேட்டை உட்பட அனைத்து பகுதிகளில் இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்களில் சென்ற பாமகவினரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் 264 பாமவினர் உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து கடலூர் வழியாக சென்னை செல்ல முற்பட்ட 306 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

Tags : Villupuram ,Cuddalore ,districts ,
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாள்...