பணிக்காலத்தில் இறந்த ஏட்டு குடும்பத்திற்கு ரூ.14 லட்சம் நிதியுதவி எஸ்.பி. வழங்கினார்

உடன்குடி, நவ. 9: பணிக்காலத்தில் இறந்த திருச்செந்தூர் தனிப்பிரிவு ஏட்டு செல்வமுருகன் குடும்பத்திற்கு எஸ்.பி. ஜெயக்குமார் ரூ.14 லட்சம் வழங்கினார். உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமுருகன். கடந்த 1999ம் ஆண்டு 2ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர் அண்மையில் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அருணா (43). தம்பதிக்கு கமலேஷ் (18), அகிலேஷ் வர்ஷன் (8) என இரு மகன்கள்.  இதனிடையே செல்வமுருகன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் வாட்ஸப் குரூப் அமைத்து சக காவலர்கள் 2750 பேரை ஒருங்கிணைத்து ரூ.14.10 லட்சத்தை திரட்டினர்.

இதையடுத்து இதற்கான காசோலையை எஸ்.பி. ஜெயக்குமார், செல்வமுருகனின் மனைவி, மகன்களிடம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் காவல்துறை சார்பில் இயன்ற உதவிகள் செய்யப்படும் என்றார். அப்போது தூத்துக்குடி பயிற்சி டிஎஸ்பி சஞ்சீவ்குமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள் மற்றும் 1999ம்ஆண்டு போலீசார், ஏட்டுக்கள் சென்னை சபரிநாதன், தூத்துக்குடி பிச்சையா, தாமோதரன், சரவணசெல்வன், செந்தில்ஆறுமுகம், பாலகிருஷ்ணன், வள்ளிநாயகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: