×

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ₹76.69 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை ஆட்சியர் உத்தரவின்பேரில் நடவடிக்கை

விழுப்புரம், அக். 30: தினகரன் செய்தி எதிரொலியாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 76.69 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் உத்தரவின்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தரமற்ற விதைகள் விற்பனை செய்யப்படுவதால் மகசூல் கிடைக்காமல் நஷ்டத்திற்கு ஆளாவதாகவும், மேலும், வேளாண் அலுவலகங்களில் விதைகள் தட்டுப்பாடு இருப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் தரமற்ற விதைகள் விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்தது. இது தொடர்காக, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் வைத்த கோரிக்கை, தினகரன் நாளிதழில் விரிவாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.    இதன் எதிரொலியாக விவசாயிகள் பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைத்துள்ளது. ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்படி,  விதை ஆய்வுத் துணை இயக்குநர் மல்லிகா தலைமையிலான குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  இதில், தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் ரகங்களான (ஏ.டி.டி. 37, ஏ.டி.டி. 39, கோ. 51, ஏ.டி.டி (ஆர்) 45) மற்றும் உளுந்து ரகங்களில் இருந்து விதை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் விழுப்புரத்தில் உள்ள விதை  பரிசோதனை நிலைய ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    மேலும், விதை விற்பனையாளர்கள், விதைச் சட்டதின்படி விலை பட்டியல் விபர பலகை, கொள்முதல் பதிவேடு, விதை இருப்பு பதிவேடு, விற்பனை ரசீது மற்றும் விதையின் முளைப்புத்திறன் பகுப்பாய்வு முடிவுகள்,  தனியார் விதைக்கான பதிவுச்சான்று ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
 நடப்பு பருவத்திற்கான அனைத்து நெல் ரகங்களும் கிலோ ரூ.33 முதல் ரூ.38 வரை நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாக விற்பது ஆய்வின் போது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட விற்பனையாளர்களின் விதை உரிமம் ரத்து செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  

ஆய்விற்கு பிறகு விதை ஆய்வு துணை இயக்குநர் மல்லிகா கூறியதாவது, விழுப்புரம்,, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 1,435 விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு விதைக் குவியல்களிலிருந்து 1,225 விதை மாதிரிகள் சேரிக்கப்பட்டு முளைப்புத்திறன் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதில், 14 தரமற்ற விதை மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், விதைச் சட்டத்தை மீறி செயல்பட்டதற்காக 46 தனியார் விதை விற்பனை நிலையங்களில் உள்ள 75.85 டன் விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 76.69 லட்சம் ஆகும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் நடப்பு பின் சம்பா பருவத்திற்கு தேவையான நெல் ரகங்கள்  (ஏ.டி.டி. 37, ஏ.டி.டி. 39, கோ. 51, ஏ.டி.டி (ஆர்) 45) ஆகியவை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்படு வருகிறது என்று கூறினார்.   இந்த ஆய்வின்போது விதை ஆய்வாளர் சவுந்தராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags : Collector ,districts ,Villupuram ,Kallakurichi ,
× RELATED அரசு ஊழியர்கள் சங்க பேரவை கூட்டத்தில்...