முன்னாள் படைவீரர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் துறையில் சிறப்பு ஒதுக்கீடு 390 பணியிடங்களுக்கு வாய்ப்பு

கிருஷ்ணகிரி, அக்.18: கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் துறையில் காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை போன்ற துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கு 5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் 390 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு ராணுவத்திலிருந்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதிக்கு பின்னர் ஓய்வுபெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழை ஒரு மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை தமிழ் தேர்வில் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டிற்குள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கோரும் இணைக்கல்வி தகுதிக்கான சான்றிதழை விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய தவறினால் உரிய கல்வித்தகுதியாக ஏற்றுக்கொள்ள இயலாது.

விண்ணப்பிக்கும் முன்னாள் ராணுவத்தினருக்கு 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், விபரங்களுக்கு www. tnrbonline.org என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அதிகாரிகள், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை சோதனையிட்டபோது, தலா 3 யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. உடனே, லாரிகளை கைப்பற்றிய அதிகாரிகள், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். கெலமங்கலம் அருகே ஜெக்கேரி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், விஏஓ சங்கர்கணேஷ் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு, 4 யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியை கைப்பற்றி கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் அதிகாரி தற்கொலை: கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை கணபதி நகரைச் சேர்ந்தவர் சந்திரன்(55). தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் இவரது மகள் நித்யா(24), ஓசூரில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசு பணியில் உள்ளனர். இதனிடையே நித்யாவும்  அரசு பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால், வேலை கிடைக்காததால், மனமுடைந்து காணப்பட்ட  நித்யா, நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

புகையிலை விற்ற 18 பேர் கைது:  ஓசூர், சூளகிரி, கந்திகுப்பம், பாரூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, கெலமங்கலம், ராயக்கோட்டை, ஊத்தங்கரை மற்றும் மத்தூர் போலீசார் பெட்டிக்கடைகள் மற்றும் மளிகை கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பெண் உள்பட 18 பேர், கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 18 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சாமை வயல் தினவிழா: கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண்மை அறிவியல் மையமானது, புதிய வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் விதமாக முதன்மை செயல்விளக்கத் திடல்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, சாமை ஏடிஎல் 1 ரகத்தில் முதன்மை செயல் விளக்க திடல்களை, பர்கூர் அருகே சிவபுரம் கிராமத்தில் உள்ள 20 விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்தி வந்தது. இதன் வயல் தினவிழாவானது சிவபுரம் கிராமத்தில் நடந்தது. இதில், வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் செந்தில்குமார் (வேளாண் விரிவாக்கம்) பங்கேற்று, சாகுபடி தொழில்நுட்பங்களான விதை நேர்த்தி, உயிர் உரம் இடுதல், உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து எடுத்துரைத்தார்.  மேலும் சாமை ஏடிஎல் 1 ரகத்தின் சிறப்பு பண்களையும் விளக்கினார்.

பர்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனசேகரன், வேளாண்மை துறையின் திட்டங்கள் குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி அலுவலர் வசந்த், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பார்த்தீபன் மற்றும் வேளாண்மை அறிவியல் மையத்தின் கால்நடை அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர். ரமேஷ் ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர். இதில், சிவபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாப் மாநிலத்தின் வேளாண்மை பல்கலைக் கழகத்தின் பயிற்சி மாணவர்கள் திருமலை, அசோக்குமார், சுகாதகர் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: