தென்காசி ஆலய திருவிழாவில் மிக்கேல் அதிதூதர் தேர் பவனி

தென்காசி, செப். 29:  பிரசித்திப் பெற்ற தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா,  கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பங்குத்தந்தைகள் சிறப்பு திருப்பலி நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் (27ம் தேதி) இரவு  பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது.  நேற்று (28ம் தேதி) காலை  பங்குத்தந்தைகள் ஸ்டீபன், லாரன்ஸ் தலைமையில் மலையாள திருப்பலியும், மாலை  முதன்மை குரு குழந்தைராஜ் தலைமையில் தேர் பவனியும் நடந்தது. கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு  தேர் பவனி கோயில் வளாகத்திலேயே நடந்தது. இதில் பங்குத்தந்தை போஸ்கோகுணசீலன், உதவி பங்குத்தந்தை சதீஷ் செல்வ தயாளன் உள்ளிட்ட ஏராளமானோர் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.  

இன்று (29ம் தேதி) காலை பங்குத்தந்தைகள் ரவீந்திரன், ஞானப்பிரகாசம் திருப்பலியும், 7.30 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோனிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. 9.30 மணிக்கு நெய்யாற்றங்கரை அருட்தந்தை ஜெரோம் சத்யன் தலைமையில் மலையாள திருப்பலியும், ஜோசப் கென்னடி, அமல்ராஜ், தீபக் செபாஸ்டின், யூஜின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. நாளை (30ம் தேதி) காலை பங்குத்தந்தை கோமிக்ஸ் தலைமையில் கொடியிறக்கம் நடக்கிறது.  ஏற்பாடுகளை  தென்காசி பங்குத் தந்தையும், திருத்தல அதிபருமான போஸ்கோகுணசீலன், உதவி பங்குத்தந்தை சதீஷ் செல்வ தயாளன், அமலவை அருட்சகோதரிகள், பங்கு பேரவை,அன்பியங்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: