தமிழகத்தில் இருந்து ரயில், பஸ்களில் கடத்தல் வெளிமாநில கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி தாராள விற்பனை: அதிகாரிகள் அலட்சியம்

பெரம்பூர், மார்ச் 20: தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களான அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவை தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக, இலவச அரிசியை நடுத்தர வர்க்கத்தினர் டிபன் செய்வதற்கும், அடித்தட்டு மக்கள் மதிய உணவிற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் ரேஷன் கடைகளில் முறையாக வழங்கப்பட்டு வந்த இந்த அத்தியாவசிய பொருட்கள் நாளடைவில் தரம் குறைவாகவும், அளவு குறைவாகவும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக கார்டுதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் குறிப்பிட்ட அளவை விட குறைவாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி கடை ஊழியர்களிடம் கேட்டால், குறைந்தளவு பொருட்களே கடைக்கு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக, கார்டுதாரர்களுக்கு மாதம்தோறும் அரசு நிர்ணயித்துள்ள அளவை விட குறைவாகவே பொருட்கள் வழங்கப்படுகிறது. இதுபற்றி கடை ஊழியரிடம் கேட்டால், 10 நாட்கள் கழித்து வந்து பாருங்கள். அடுத்த வாரம் வந்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால் மீண்டும் அவர்கள் திரும்பி வந்து பொருட்களை வாங்குவதில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கடை ஊழியர்கள், கள்ள சந்தையில் அரிசி, பருப்பு, கோதுமை பலவற்றையும் விற்று வருகின்றனர். குறிப்பாக, ரேஷன் அரிசி தமிழகத்தைச் சுற்றியுள்ள மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தரகர்கள் மூலம் கடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்களிடம் இருந்து 4 ரூபாய்க்கு அரிசியை வாங்கும் உள்ளூர் தரகர்கள், அதை வெளி மாநில தரகர்களிடம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பல குழுக்களாக செயல்படும் இந்த வெளிமாநில தரகர்கள் ஆங்காங்கே இந்த ரேஷன் அரிசியை வாங்கி ரயில் மற்றும் பஸ்கள் மூலம் ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு கடத்தி செல்கின்றனர். அங்கு, அரிசியை பாலீஷ் செய்து ஒரு கிலோ 40 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ரேஷன் கடைகளில் இருந்து கள்ளச்சந்தைக்கு அரிசி விற்கப்படுவது பரவலாக நடைபெறுகிறது. ஆந்திராவை ஒட்டி சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடசென்னையில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சட்டவிரோதமாக இந்த அரிசி விற்பனை நடைபெறுகிறது.

இதை முறையாக கண்காணித்து தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெரம்பூர் நெல்வயல் சந்து பகுதியில் மூடியிருந்த ரேஷன் கடையை மதிய நேரத்தில் ஊழியர் ஒருவர் திறந்தார். உள்ளே ஆந்திர எழுத்துக்களை பொறித்த மூன்று கோணி பைகளை எடுத்துக் கொண்டு 3 பெண்கள் உள்ளே நுழைந்தனர். சிறிது நேரத்தில் 3 கோணிகளிலும் அரிசியை நிரப்பிக்கொண்டு, பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற பெண்கள், அங்கிருந்து ரயில் மூலம் ஆந்திரா மார்க்கமாக கிளம்பி சென்றனர். இந்த காட்சியை அடிக்கடி அந்த ரேஷன் கடையில் காணமுடிகிறது. அவ்வப்போது, ரயில்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி, கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தாலும், இதற்கு உடந்தையான அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மாதம்தோறும் கார்டுதாரர்களுக்கு குறைந்தளவு பொருட்களை வழங்கும் ரேஷன் கடை ஊழியர்கள், ஏராளமான பொருட்களை பதுக்கி, வெளி சந்தையில் விற்பனை செய்கின்றனர். இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், ரேஷன் கடை ஊழியர்கள் தைரியமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அரசு இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பெண் குருவிகள்

உணவு பொருள் பாதுகாப்பு துறை காவலர் ஒருவர் கூறுகையில், “இந்த ரேஷன் அரிசி கடத்தலில் பெண்களே அதிகளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது ஒரு குடிசைத் தொழில் போன்று தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திர எல்லை, கர்நாடக எல்லை, கேரள எல்லை ஆகிய மூன்று எல்லைகளிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்களை மூளைச்சலவை செய்து இந்த தொழிலில் கடத்தல்காரர்கள் ஈடுபடுத்துகின்றனர். எத்தனை முறை பிடித்து சிறைக்கு அனுப்பினாலும் இவர்களை யார் இயக்குகிறார்களோ அவர்களே வெளியில் எடுத்து மீண்டும் இதே தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை கிடைக்கிறது. இவர்களை இயக்குபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்கின்றனர்” என்றார்.

Related Stories:

>