×

அடமான பத்திரத்தை திருப்பி தராததால் பைனான்ஸ் அதிபரை தாக்கிய 2 விவசாயிகள் கைது

போச்சம்பள்ளி, மார்ச் 19:மத்தூர் அருகே அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை திருப்பி தராததால் பைனான்ஸ் அதிபரை சரமாரியாக தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். மத்தூர் அடுத்துள்ள மிண்டகிரி பகுதியை சேர்ந்த விவசாயி மாதப்பன்(60). இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(45). இவர்கள் இருவரும் தங்களது நிலப்பத்திரத்தை, பைனான்ஸ் அதிபரான கார்த்திகேயன்(40) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமானம் வைத்து, பணம் வாங்கியுள்ளனர். பின்னர் வாங்கிய பணத்தை, வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்தியுள்ளனர். பணம் செலுத்தி மாதக்கணக்கில் ஆகும் நிலையில், அடமானம் வைத்த நிலப்பத்திரத்தை கார்த்திகேயன் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கோவிந்தசாமியும், மாதப்பனும், கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பத்திரம் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாதப்பன், கோவிந்தசாமி ஆகியோர் கார்த்திகேயனை சரமாரி தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொடுத்த புகாரின்பேரில், மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து, கோவிந்தசாமியையும், மாதப்பனையும் கைது செய்தனர்.

Tags : Accounting Chancellor ,
× RELATED காவேரிப்பாக்கத்தில் கதறும் மக்கள்...