நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து கத்திமுனையில் மிரட்டி 25 சவரன் கொள்ளை: முகமூடி ஆசாமிகள் துணிகரம்

சென்னை: நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி ஆசாமிகள், கத்திமுனையில் 25 சவரன் நகைகள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மறைமலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. மறைமலைநகர் சின்ன செங்குன்றம், அன்னை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கேலியப்பன் (70). ஓய்வு பெற்ற கருவூல அலுவலர். இவரது மனைவி செல்வராணி (68). இவர்கள், தங்களது பேரனுடன் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்து தூங்கினர். நள்ளிரவில் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்த கேலியப்பன், அங்கு சென்று பார்க்க முயன்றபோது, முகமூடி அணிந்தபடி கையில் உறை, காலில் சாக்ஸ், ஜட்டி, பனியன் மட்டுமே அணிந்திருந்த 3 பேர், திடீரென பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இதை பார்த்த கேலியப்பன் அலறி கூச்சலிட்டார். உடனே மர்மநபர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியை கேலியப்பன் மற்றும் அவரது மனைவி, பேரன் கழுத்தில் வைத்து மிரட்டி, தாலி செயின், கம்மல், வளையல், மோதிரம் உள்பட 25 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம், விலை உயர்ந்த 2 செல்போன்கள் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து கொண்டு, வீட்டை வெளிப்பாக்கமாக பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதையடுத்து கேலியப்பன், மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் எஸ்பி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள், கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: