கஞ்சா பயன்படுத்துவது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் கைதிகளுக்குள் பயங்கர மோதல்

சென்னை: சென்னை புழல் மத்திய சிறைச்சாலையின் விசாரணை பிரிவில் சுமார் 1,800க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு கஞ்சா, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் மற்றும் செல்போன் நடமாட்டம் தொடர்பாக இங்குள்ள ஒருசில கைதிகள் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். இதனால், கைதிகளிடையே அடிக்கடி அடிதடி தகராறு நடைபெற்று வந்தது. இந்நிலையில், சென்னை குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி, பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த டேவிட் (எ) பில்லா (24) என்பவர் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் முதல் பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிறையில் இருந்து வருகிறார். இவருடன் திருநின்றவூரை சேர்ந்த ராஜா (28) என்ற கைதியும் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

இதற்கிடையே, சிறை வளாகத்துக்குள் டேவிட் செல்போன் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ராஜா தகவல் தெரிவித்து வந்ததாகவும், இதுதொடர்பாக இருவரிடையே அடிதடி தகராறு நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மீண்டும் அடிதடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், கோபமடைந்த ராஜா, பில்லாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில், அவருக்கு மூக்கு, காது, முகம் மற்றும் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராஜாவிடம் சிறை காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: