அடமான நகையை திருப்பிய பிறகு நெல்லை தனியார் வங்கியில் போலி நகை வைத்து மோசடி மேலாளர், கேஷியர் உட்பட 3 பேர் மீது வழக்கு

கேடிசி நகர், மார்ச் 11: அடமான நகையை திருப்பிய பிறகு நெல்லை டவுனில் தனியார் வங்கியில் போலி நகையை வைத்து மோசடியில் ஈடுபட்ட மேலாளர், கேஷியர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை அருகே சுத்தமல்லியைச் சேர்ந்த ராமசாமி மகன் மாரியப்பன்(34). இவர், டவுனில் உள்ள தனியார் வங்கியில் நகையை அடமானம் வைத்து பெற்ற கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியுடன் செலுத்தி திருப்பிவிட்டார்.

ஆனால் அந்த வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து மாரியப்பன் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ‘‘விரைவில் நகையை திருப்பி விடும்படியும், இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட நகையை ஏலம் விடுவோம்’’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

உடனே மாரியப்பன், அந்த வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது அவர் ஏற்கனவே நகை வைக்க பயன்படுத்திய ஆவணங்களை, நகையை திருப்பிய பிறகும் கிழித்து போடாமல், அதை பயன்படுத்தி போலி நகைகளை அவர் பெயரிலேயே வைத்து கடன் பெற்றது தெரியவந்தது. இதுகுறித்து மாரியப்பன், நெல்லை டவுன் குற்றப்பிரிவில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு விசாரணை நடத்தி மாரியப்பன் பெயரில் போலி நகையை வைத்து மோசடியில் ஈடுபட்ட கேஷியர் பீர்முகமது, மேலாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் டவுனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: