களக்காட்டில் கடையை மாற்ற எதிர்ப்பு பீடி தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்

களக்காடு, மார்ச் 10: களக்காட்டில் பீடிக்கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, பெண் பீடி தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

களக்காடு போலீஸ் நிலையம் அருகே வரதராஜபெருமாள் கோயில் வடக்கு ரதவீதியில் தனியார் பீடிக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் களக்காடு, காடுவெட்டி, எஸ்.என்.பள்ளிவாசல், தோப்பூர், சிதம்பரபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். இந்த கடையை களக்காட்டில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சிதம்பராபுரத்திற்கு இடமாற்றம் செய்ய நிர்வாகத்தினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. களக்காட்டில் இருந்து சிதம்பரபுரத்திற்கு போதிய பஸ் வசதி கிடையாது. எனவே பெண்கள் நடந்து மட்டுமே செல்ல முடியும், பீடி சுற்றும் பெண்கள் 3 கிமீ தூரம் நடந்து செல்வது சிரமம் என்பதால் பலர் பீடி சுற்றும் தொழிலை கைவிட வேண்யது வரும் என்றும், அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் பீடி தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பீடித் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பீடிக்கடையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். மாலை வரை போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் உணவு அருந்தாமல் கடை முன் அமர்ந்திருந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கண்டு கொள்ளாத நிர்வாகம்: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், நாங்கள் காலை முதல் மாலை வரை உணவருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் எங்கள் போராட்டத்தை பீடி கடை நிர்வாகமும், போலீசாரும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. யாரும் பேச்சுவார்த்தைக்கு கூட வரவில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர்.

Related Stories: