கிருஷ்ணகிரி, மார்ச் 3: கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளை மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கிருஷ்ணகிரி அணையின் பிரதான 8 மதகுகளில், முதல் மதகு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி உடைந்தது. உடைந்த மதகை அகற்றி விட்டு, கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி புதிய மதகு பொருத்தப்பட்டது. இதையடுத்து, ₹19 கோடி செலவில் மற்ற 7 மதகுகளும் புதியதாக மாற்றப்படுகின்றன. இதற்காக பழைய மதகுகள் அகற்றப்பட்டு, கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் புதிய மதகுகள் அமைக்கும் பணிகள் துவங்கியது. இதில் மதகின் இருபக்கத்திலும் 8 ரோலர்கள் பொருத்தப்பட்டு, மதகின் 3 கீழ் பாகங்களையும், நான்கு மேல் பாகங்களையும் வைத்து, அவற்றின் குறுக்கில் ஐந்து கேடர்களை வைத்து இணைக்கின்றனர். இப்பணிகள் அனைத்தும் முடிந்து இணைப்பு பாகம் முழுவதும் வெல்டிங் வைக்கப்படுகிறது.