சின்னமனூரில் நீர் நிலையை ஆக்கிரமித்த கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்

சின்னமனூர், பிப். 28: ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலியால், சின்னமனூரில் உள்ள சீப்பாலக்கோட்டை சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 கடைகள், 2 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.சின்னமனூரில் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள மின்நகர் பகுதியில் ராணிமங்கம்மாள் ஓடையை ஆக்கிரமித்து கடைகள், வீடுகளை கட்டியிருந்தனர். இதனால், மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், கனமழை காலங்களில் வீடுகள், சாலைகளில் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பரில் சீப்பாலக்கோட்டை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றத்தை நிறுத்தக்கோரி, 7 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 11 இடங்களில் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து உத்தமபாளையம் நெடுஞ்சாலை துறையினர், வருவாய்த்துறையினர், சின்னமனூர் நகராட்சி, போலீசார் ஜேசிபி மூலம் சீப்பாலக்கோட்டை சாலை மின்நகர் பகுதியில் 9 கடைகள், இரண்டு வீடுகளை நேற்று இடித்து தரைமட்டமாக்கினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து உத்தமபாளையம் பொறியாளர் உதயகுமார் கூறுகையில், ‘ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி, சீப்பாலக்கோட்டை சாலையில் 9 கடைகள், 2 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. இன்னும் பத்து நாட்களில் சின்னமனூரில் காந்தி சிலை வரையும், 27 வார்டுகளிலும் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படும் என்றனர்.

Related Stories: