பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி, பிப்.27:பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழாவையொட்டி, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பர்கூர் கூட்டுறவு ஐடிஐயில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழாவையொட்டி, காவேரிப்பட்டணம் கிளை ரெட்கிராஸ் மற்றும் காவேரிப்பட்டணம் ஒன்றிய பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, ஐடிஐ முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ரெட்கிராஸ் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

இதில், சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவர் கோபி பங்கேற்று, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். பர்கூர் போலீஸ் எஸ்.ஐ.அமரன், போதை பொருட்கள் உபயோகப்படுத்துதல் மற்றும் வைத்திருப்பவர்கள் மீது எடுக்கப்படும் குற்ற நடவடிக்கைகள் குறித்தும், அதனால் அவர்களது குடும்பம் சமுதாயத்தால் எவ்வாறு ஒதுக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் பேசினார். பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கு கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ரெட்கிராஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், லட்சுமணன், திருப்பதி, ஐடிஐ உதவி பயிற்சி அலுவலர் மாலா, இளநிலை பயிற்சி அலுவலர்கள் சுந்தரபாண்டியன், கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: