×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை இஸ்லாமியர்கள் முற்றுகை போலீசார் குவிப்பு

திருவண்ணாமலை, பிப்.20: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை நேற்று இஸ்லாமியர்கள் முற்றுகையிட்டனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, நடப்பு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை நேற்று(புதன்) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அனைத்து மஹால்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.அதையொட்டி, காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி மேற்பார்வையில், எஸ்பி சிபி சக்கரவர்த்தி, சென்னை தலைமையிட காண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 900 போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் 200 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்பவர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் அனுமதித்தனர். மேலும், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் வளாகங்களில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து மஹால்லா ஜமாஅத் மற்றும் இயக்கங்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட அறிவியல் பூங்கா அருகில் இருந்து தேசியக்கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை- வேலூர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.தொடர்ந்து, இஸ்லாமியர்கள் தங்களின் கோரிக்கை மனுவை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் வழங்கினர். இஸ்லாமியர்களின் போராட்டம் காரணமாக நேற்று திருவண்ணாமலை நகர் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Islamists ,protest ,Collector ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...