ஆலங்குளம் பேரூராட்சி கடை வாடகை விவகாரம் உள்ளாட்சித்துறை அமைச்சரை சந்தித்து வணிகர்கள் மனு

கடையம், பிப்.19: ஆலங்குளம் சிறப்புநிலை பேரூராட்சிக்கு சொந்தமான பஸ்நிலைய வளாகத்தில் 54 கடைகளில் சிறு வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளுக்கு தற்போது அதிகபட்சமாக 300 சதவீதத்திற்கும் மேல் வாடகையை உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வாடகை பன்மடங்கு உயர்ந்து ஆயிரக்கணக்கில் வாடகை செலுத்தவேண்டிய நிலை உள்ளது. இந்த கடைகளில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் அனைவரும் மிகவும் நலிவடைந்தவர்கள். இவர்களின் வாழ்வாதாரம் இந்த கடைகளையே நம்பி உள்ளது. இது சம்பந்தமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா, பேரமைப்பின் தென்காசி மாவட்டத்தலைவர் வைகுண்டராஜா மற்றும் ஆலங்குளம் வணிகர்கள் பலர் நேரில் சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அப்போது அமைச்சர் வணிகர்களின் கோரிக்கையினை ஏற்று ஒருவாரத்திற்குள் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சிக்கடைகளின் வாடகை உயர்வு சம்பந்தமாக மறுபரிசீலனை செய்து தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். மேலும் ஆலங்குளம் பகுதியில் உள்ள கடைகளுக்கு பன்மடங்கு குத்தகை உயர்வினை நிறுத்தி வைப்பதாக வாய்மொழி உத்தரவிட்டார் என பேரமைப்பின் தென்காசி மாவட்டத்தலைவர் டி.பி.வி.வைகுண்டராஜா கூறினார்.

Related Stories: