நடைபாதைகளில் கடைகள் கட்ட அனுமதிக்கும் நகராட்சியின் டெண்டரை ரத்து செய்ய கோரிக்கை

விருதுநகர், பிப்.18: பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகளில் கடைகள் கட்டிக்கொள்ள தனியாருக்கு அனுமதி வழங்கும் நகராட்சியின் டெண்டரை ரத்து செய்யக்கோரி மக்கள் மன்றம் உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மன்ற ஒருங்கிணைப்பு தலைவர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், விருதுநகர் நகராட்சி பொது ஏலம் மற்றும் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு ஒன்றை பிப்.12ல் வெளியிட்டுள்ளது. அதன்படி 9 இடங்களில் தனியார் கடை கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கும் டெண்டர் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 9 இடங்களில் 2 இடங்கள் போக 7 இடங்கள் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையாகும்.

விருதுநகரில் நகராட்சி எல்லைக்குள் 1984 முதல் பிரதான சாலைகளில் அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள் தற்போது நிரந்த கட்டிடங்களில் ஆகிரமிப்புகளாக உருவாகி உள்ளது. இதனால் நகர் முழுவதும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது கூட ஜாதி, மத, அரசியல் கட்சிகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நகராட்சியின் புதிய ஒப்பந்தப்புள்ளி ஏல அறிவிப்பு சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகளுக்கான கட்டிடங்கள் ஏற்படும் போது விபத்துகள், நெரிசல்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும். நகரின் எதிர்காலம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகும். நகராட்சியின் ஏல அறிவிப்பை ரத்து செய்து நகரில் அமைதி நிலவ உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். மற்றொரு மனுவில், நகரில் சாலையோர சிறு, குறு வியாபாரிகள் நலன் கருதி, போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க முந்தைய மாவட்ட கலெக்டர் பாலாஜி அறிவித்தபடி விருதுநகர் நகராட்சி பூ மாலை வணிக வளாகம் அல்லது மதுரை ரோட்டில் உள்ள மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட நிலத்தில் சாலையோர வியாபாரிகள் பூ, மாலை விற்பனை செய்வதற்கான அனுமதி அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

Related Stories: