குறுகிய காலத்தில் விவசாய கடன் அட்டை பெற சிறப்பு முகாம்கள்

கிருஷ்ணகிரி, பிப்.18: குறுகிய காலத்தில் விவசாய கடன் அட்டைகள் பெறும் வகையில், இன்று முதல் ஒரு வாரம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக எம்.சி.பள்ளி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் தெரிவிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே எம்.சி.பள்ளி கிராமத்தில் விவசாய கடன் அட்டை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமின் துவக்க நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜக்குல அக்கண்ட ராவ் தலைமை வகித்தார். வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் பேசியதாவது: பிரதம மந்திரி கவுரவ நிதி பெறும் பயனாளிகள் அனைவரும், விவசாய கடன் அட்டைகளை குறுகிய காலத்தில் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, 18ம் தேதி(இன்று) பைனப்பள்ளி, மரிக்கம்பள்ளி, பெத்தனப்பள்ளி ஆகிய கிராமங்களிலும், 19ம் தேதி(நாளை) கங்கலேரி, நாரலப்பள்ளி, மோரமடுகு, 20ம் தேதி(வியாழன்) ஆலப்பட்டி, கொம்பள்ளி, அகசிப்பள்ளி, வெலகலஅள்ளி, 21ம் தேதி சிக்கப்பூவத்தி, செம்படமுத்தூர், 22ம் தேதி காட்டிநாயனப்பள்ளி, பெல்லாரம்பள்ளி, 24ம் தேதி பெரியமுத்தூர், சோக்காடி, கூலியம் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வங்கி கிளை அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொடக்க கூட்டுறவு சங்க செயலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார். வேளாண்மை துணை இயக்குநர் கிருஷ்ணன் பேசுகையில், விவசாய கடன் அட்டை வங்கும் திட்டத்தில், விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ₹1.60 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாராத தொழில்களுக்கு முதலீடு செய்ய கடன் பெறலாம்,’ என்றார். முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் விஜயன் செய்திருந்தார்.

Related Stories: