குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் தலைமை செயலகத்தில் 500 போலீசார் குவிப்பு

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக கிடைத்த தகவலையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி கடந்த 14ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு தடியடி நடத்தப்பட்டது. இதை கண்டித்து மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என்று இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. அவர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.

இதற்கிடையே, 19ம் தேதி (நாளை) சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது. இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், தலைமைச்செயலகம், அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சாலைகளில் ஆங்காங்கே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.யாராவது முற்றுகையிட முயன்றால், அவர்களை கைது செய்வதற்கு வசதியாக 5க்கும் மேற்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: