×

குமரி குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சிக்கிய வழக்கில் காப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு நிதி செலவினங்களை ஆய்வு செய்ய கோரிக்கை

நாகர்கோவில், பிப்.17 : குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், குமரி குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர்  அலுவலக கூடுதல் கட்டிடத்தின் 3 வது தளத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக குமுதா இருந்து வருகிறார். குமரி மாவட்டத்தை பொறுத்தவரை குழந்தைகள் காப்பகங்கள் அதிகம் ஆகும். இந்த காப்பகங்கள் அனைத்தும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கீழ் தான் வருகின்றன. வருடந்தோறும் இங்கு ஆய்வு நடத்தி அனுமதி வழங்க வேண்டும். இந்த காப்பகத்தில் குழந்தைகள் உடல் ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்களா? என்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டிய பொறுப்பு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தான் உண்டு. எனவே குமரி மாவட்டத்தில் மிக முக்கிய அதிகாரியாக குமுதா, விளங்கி வந்தார்.  4 ஆண்டுகளுக்கு மேல் இவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். பல்வேறு காப்பகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி, நடவடிக்கை மேற்கொண்டார். குழந்தைகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களிலும் இவர் நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால் கலெக்டர், எஸ்.பி. ஆகியோரிடம் நற்பெயருடன் விளங்கினார். இதனால் குமுதா மேற்கொண்ட நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீப காலமாக இவரின், நடவடிக்கைகள் குறைந்து இருந்தன. மேலும் காப்பகங்களுக்கு புதுப்பிப்பு உரிமம் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இவர் முறைகேடாக பணம் கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.இந்த நிலையில் கடந்த 14ம் தேதி மதியம் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மதியழகன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குமுதா அறையில் இருந்து ₹1 லட்சத்து 35 ஆயிரத்து 800 கைப்பற்றப்பட்டது. இந்த சோதனையின் போது  குமுதாவும் அலுவலகத்தில் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தி, சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சில குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால் இந்த பிரிவுக்கு வருடந்தோறும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி, மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு , பின்னர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த நிதியை கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய கருத்தரங்கம், விழிப்புணர்வு முகாம்கள், ஊர்வலம், துண்டு பிரசுரங்கள் வினியோகம், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் குமுதா பதவி வகித்த இந்த கால கட்டங்களிலும் நிதி ஒதுக்கீடு அதிகளவில் இருந்துள்ளது. இந்த நிதியை இவர் எவ்வாறு பயன்படுத்தினார் என்பது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனியார் கல்லூரிகள் கலையரங்கில் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள், விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது, என்பது பற்றிய விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்து வருகிறார்கள். குமுதாவுக்கு அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாராவது உடந்தையாக இருந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்த உள்ளனர்.

இதற்கிடையே ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுலிங்க ஐயன், முதலமைச்சர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள மனுவில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக சுமார் 4 ஆண்டுகள் வரை குமுதா நீடித்துள்ளார். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் தொடர்ந்து இந்த பதவியில் நீடிக்க வாய்ப்பு இல்லை. எனவே இவரது பின்னணியை விசாரிக்க வேண்டும். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? எவ்வாறு இந்த நிதி செலவிடப்பட்டது என்பது பற்றி, விசாரணை நடத்த வேண்டும். அரசு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்பட்டு உள்ளதா? என்பது தொடர்பாகவும், தொடர்ந்து இந்த பதவியில் குமுதா நீடித்தது எப்படி என்பது பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : administrators ,Kumari ,child protection officer ,
× RELATED பாஜ நிர்வாகிகள் பயிற்சி முகாம்