×

அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15 மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி டோஸ்: தேர்தல் பணிகளில் சுணக்கம், பணத்தை சுருட்டி விட்டனர் என குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டியதாகவும், பணத்தை சுருட்டியதாகவும் எழுந்த புகாரை தொடர்ந்து சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 15 மாவட்ட நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கியதுபோக 32 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

அதேநேரத்தில் அதிமுகவுக்கும், பாஜவுக்கும் 2வது இடத்துக்குத்தான் போட்டி என்றும் கூறப்பட்டது. ஆனால், பாஜ கூட்டணியில் முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட கோவை, வேலூர், தென்சென்னை, தேனி, ராமநாதபுரம், பெரம்பலூர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் 2வது இடத்தை பிடிக்க வாய்ப்புகள் உள்ளன. அங்கெல்லாம் அதிமுக 3வது இடத்தையே பிடிக்கும். பல இடங்களில் டெபாசிட் பறிபோகவும் வாய்ப்புகள் உள்ளதாக தேர்தலுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின.

இதனால் பிரசாரத்துக்குச் சென்ற எடப்பாடி, இந்த தலைவர்களில் கோவையில் அண்ணாமலை, தேனியில் டிடிவி, ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் 2வது இடத்துக்கு வரக் கூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் தேர்தலுக்கு பின்னர் அதிமுக நிர்வாகிகள் தேர்தலின்போது முறையாக வேலை செய்யவில்லை. எதிரணி வேட்பாளர்களிடம் விலைபோய் விட்டனர். சிலர் கடமைக்கு வந்து சென்றனர். கட்சி செலவுக்காக தலைமை கொடுத்த நிதியை மேல்மட்ட நிர்வாகிகள், கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு கொடுக்க இல்லை. இதனால் பூத் செலவுக்கே கஷ்டப்படக் கூடிய சூழ்நிலைதான் நிலவியது என்றும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 15 மாவட்ட செயலாளர்கள், தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை ஆலோசனை நடத்தினார். அப்போது, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் செயல்பட்ட நிர்வாகிகளின் வேகம், அந்த பற்று, பாசம் எங்கே போனது. ஏன் அப்போது போல இரவு, பகல் பாராமல் வேலை செய்யவில்லை. ஏனோ, தானோ என பணியாற்றினீர்கள். தலைமை மீது உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போனது ஏன்? திமுகவில் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். உங்களது அர்ப்பணிப்பு எங்கே போனது என கடுமையாக திட்டியுள்ளார். கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என்றும் எச்சரித்துள்ளார்.

அப்போது சில மூத்த நிர்வாகிகள், நீங்கள் புதியவர்களுக்கு கட்சிக்கு வந்தவுடன் பதவி வழங்குகிறீர்கள். அவர்கள் எங்களை மதிப்பதில்லை என்று கூறியுள்ளனர். அதற்கு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால்தான் கட்சி உயிரோட்டமாக இருக்கும். எம்ஜிஆர் காலத்துக்கு ஆட்களையே இன்னும் பதவியில் வைத்திருந்தால் கட்சி எப்படி உயிரோட்டமாக இருக்கும். கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும் என்று எடப்பாடி கூறியுள்ளார். பின்னர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சரியாக வேலை செய்யாத நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்றும் எச்சரித்து நிர்வாகிகளை அனுப்பி உள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் மண்டல வாரியாக தொடர்ந்து நடைபெறும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

* ஆதிராஜாராம் மீது 7 வட்ட செயலாளர்கள் புகார்
எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தில் பல நிர்வாகிகள் வேலை செய்யவில்லை. அவர்களின் பதவிகளை பறிக்க வேண்டும் என தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் மீது 7 வட்ட செயலாளர்கள், மூத்த நிர்வாகிகள் பொன்னையன் மற்றும் தமிழ்மகன் உசேனிடம் அளித்துள்ள புகார் மனுவில், ‘நாங்கள் வேலை செய்ய தயாராக இருந்தோம். ஆனால் வேட்பாளரை கூட எங்கள் பகுதிக்கு மாவட்ட செயலாளர் அழைத்து வரவில்லை. எந்த பணியுமே கொடுக்காமல் எப்படி வேலை செய்வது, இதனால் மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் அளித்துள்ளனர்.

The post அதிமுகவில் சென்னை மண்டலத்தை சேர்ந்த 15 மாவட்ட நிர்வாகிகளுக்கு எடப்பாடி டோஸ்: தேர்தல் பணிகளில் சுணக்கம், பணத்தை சுருட்டி விட்டனர் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Chennai ,AIADMK ,Chennai region ,Tamil Nadu ,DMK ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்