மணலி மண்டலம் 17வது வார்டு கொசப்பூரில் புதர்மண்டி கிடக்கும் மயான பூமி: சடலம் எரிப்பதில் சிரமம்

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 17வது வார்டு கொசப்பூரில் உள்ள சுடுகாடு புதர் மண்டி காணப்படுவதால் சடலங்களை எரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மணலி மண்டலம், 17வது வார்டுக்குட்பட்ட கொசப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான மயான பூமி உள்ளது. இங்கு கொசப்பூர், கொசப்பூர் 1ம் பகுதி, விஸ்வநாததாஸ் நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள்  பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த மயானத்தில் எங்கு பார்த்தாலும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து  கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை சுமந்து வரும் பொதுமக்கள் நடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும்  இங்கு தண்ணீர், தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் சடலங்களை அடக்கம் செய்யும்போது சடங்கு செய்ய தண்ணீர் இல்லாததால் வீட்டில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து வர வேண்டிய நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் இங்கு வரும் பொதுமக்கள் அங்கு சுற்றித்திரியும்  விஷ பூச்சிகள், பாம்பு கடிக்கு ஆளாகின்றனர். இந்த மயானத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி குடிநீர், தெருவிளக்கு போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என்று முன்னாள் கவுன்சிலர் கவிதா நாராயணன் பலமுறை மணலி மண்டல  அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

Advertising
Advertising

எனவே இனியாவது இந்த மயான பூமியை சீரமைத்து மக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாதவாறு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த சுடுகாடு  முழுவதும் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் இங்கு வருவதற்கே அச்சமாக உள்ளது. ஒவ்வொருமுறையும் யாராவது இறக்க நேர்ந்தால் உடலை அடக்கம் செய்வதற்கு  முன்பாக கூலி ஆட்களை நியமனம் செய்து சுடுகாட்டில் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன் பிறகு தான் சடலங்களை அடக்கம் செய்ய கொண்டு வர முடியும். இந்த நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றபோதிலும் மக்களின் பிரச்னையை தீர்க்க யாரும் நடவடிக்கை எடுக்க முன்வருவது கிடையாது. இதனால் ஒவ்வொரு முறையும் ஏழை, எளிய மக்கள் படும் சிரமத்தை அளவிட முடியாது. இதுகுறித்து மணலி மண்டல அதிகாரிகளிடம் பலமுறை பொதுமக்கள் புகாரளித்தும் அவர்கள் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகின்றனர். மக்களின் துயர நிலையை கருத்தில் கொண்டு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: