×

ஓசூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை கொன்ற வாலிபருக்கு ஆயுள்

ஓசூர், பிப்.13: ஓசூர் அருகே நிலத்தகராறில் விவசாயியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்த வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்  அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சின்னண்ணா(62).  இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பிரகாஷ்(34) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக  பிரச்னை இருந்தது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில்  தொடரப்பட்டு  இருந்தது. இந்நிலையில் கடந்த 2016 பிப்ரவரி 24ம் தேதி, சானமாவு போஸ்ட் ஆபிஸ்  அருகில் சின்னண்ணா, அவரது மனைவி நாகம்மா(60) மற்றும் அவரது மகன் ஆகியோர்,  டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த பிரகாஷ்,  அருகில் இருந்த மெக்கானிக் ஷாப்பிலிருந்து   இரும்பு ராடை எடுத்து வந்து  சின்னண்ணாவை தாக்கினார். இதில், அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.  இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற  நீதிபதி அசோகன் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி, பிரகாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹1000 அபராதம் விதித்தும்,  அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், நாகம்மாவுக்கு கொலை மிரட்டல்  விடுத்ததற்காக இரண்டாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹500 அபராதமும்,  கட்ட தவறினால் மேலும் 3 மாத  சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். இந்த  வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வேலாயுதம் ஆஜரானார்.


Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு