தாரமங்கலம் கோயில் திருவிழாவில் மோதல்; 17 பேர் கைது

தாரமங்கலம், பிப்.12: தாரமங்கலம் கோவில் திருவிழாவில்  இருதரப்பினரிடையே நடந்த மோதலில் கல்வீச்சு நடந்தது. இது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. இறுதிநாளான நேற்றுமுன்தினம் தேரை இளைஞர்கள் உற்சாகமாக இழுத்து வந்தனர். மாலை 6.30 மணி அளவில் தேர்நிலை நிறுத்தம் செய்யப்பட்டது. சாமியை இறக்கி கீழே வைத்தனர். இரவு 8.30 மணி அளவில் தேரை இழுத்து வந்த இளைஞர்கள் மேளதாளத்துடன் கோயிலை 3 சுற்று சுற்றி வருவார்கள். அதன்படி மேளதாளத்துடன் கோயிலை சுற்றி வந்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர், நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் ஆடுகிறீர்கள்? என இன்னொரு தரப்பை சேர்ந்த வாலிபரிடம் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அந்த வாலிபர் அவரை தாக்கினார். சிறிது நேரத்தில் தாக்கப்பட்ட வாலிபர், அவரது நண்பர்களை ஒருங்கிணைந்தார். ரவி என்பவர் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது இன்னொரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். டியூப் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டது. 7க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தின் கண்ணாடிகள் நொறுங்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும்  ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Related Stories: