சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 12 ஆயிரம் கி.மீ., சைக்கிள் பயணம் குஜராத் குழுவிற்கு நெல்லை போலீஸ் கமிஷனர் வரவேற்பு

நெல்லை, ஜன. 30:  பெண் குழந்தைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மிகிர் மக்சார் மற்றும் மியானக் மேதா ஆகிய இருவரும் 75 நாட்கள் சுமார் 12 ஆயிரம் கி.மீ., தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் குஜராத் மாநிலத்தில் ‘தகோட்’ என்ற இடத்திலிருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினர். இவர்கள் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அங்கிருந்து நேற்று நெல்லை வந்த சைக்கிள் பயண குழுவினரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். நெல்லை மாநகர காவல் துறை சார்பில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார். இங்கிருந்து விருதுநகர், திருச்சி, விழுப்புரம், வழியாக சென்னை செல்லும் அவர்கள் தொடர்ந்து ஆந்திரா, ஓடிசா, மேற்கு வங்கம் மாநிலங்கள் வழியாக நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு பயணிக்கின்றனர். பின்னர் அங்கிருந்து உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து மீண்டும் குஜராத் செல்கின்றனர். இவர்கள் தங்கள் பயணத்தில் இரண்டு நாடுகள், 18 மாநிலங்களுக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: