கல்வராயன்மலை சுற்றுலா தலமாக்கப்படும்

சின்னசேலம், ஜன. 28: கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கரியாலூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிரண் குராலா பேசினார்.கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கரியாலூர் ஊராட்சியில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, கல்வராயன்மலை சப்-கலெக்டர் பிரகாஷ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஊராட்சி செயலர் ஆண்டி, குடிநீர் சேமிப்பு, தூய்மை பணி, டெங்குவை கட்டுப்படுத்துதல், முழு சுகாதார திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்ட தீர்மானங்களை வாசித்தார்.

இதையடுத்து அந்த தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் சாலை வசதி, பால் சொசைட்டி, பொது கழிப்பறை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கலெக்டர் பேசும் போது மக்களின் தேவைக்கு ஏற்ப பால் சொசைட்டி, கழிப்பறை வசதி செய்து தரப்படும். பள்ளி கழிப்பறைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். குடும்ப நலனில் மக்கள் அக்கறை காட்ட வேண்டும். கல்வராயன்மலையில் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள், வியூ பாயிண்ட், சின்ன திருப்பதி கோயில், ஓங்கி உயர்ந்த மலை உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது. கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக்கினால் மலை மக்களின் பொருளாதாரம் உயரும், தொழில் வணிகம் பெருகும். அதற்காக சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் குழு அமைத்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் கல்வராயன்மலை சுற்றுலா தலமாக்கப்படும் என்றார்.இதில் கல்வராயன்மலை தாசில்தார் நடராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகு, ரங்கசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : tourist destination ,
× RELATED பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி...