சாலைவிதி மீறல்களை கண்காணிக்க காமராஜர், அண்ணா சாலையில் நவீன கேமரா பொருத்தப்படும் : போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: சென்னையில் வாகனங் களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதால் சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. மறுபுறம் போக்குவரத்து விதிமீறல்களும் அதிக அளவில் நடக்கிறது. இதை தடுக்கும் வகையில், அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முக்கிய சாலைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை படம்பிடிக்கும். அந்த படத்தை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவைக்கும். அங்கு வாகனத்தின் நம்பரை வைத்து, அதன் உரிமையாளரின் பெயர், எந்த ஆர்டிஓ அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வாகனம் வருகிறது. முறையாக வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பது போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படும். தொடர்ந்து, பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி ஈடுபட்ட விதிமீறலுக்கு ஏற்றவாறு அபராதத்தொகையும் கணக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ரசீது உரிமையாளரின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் தற்போது விதிமீறல் குறித்து சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தகைய விதிமீல்களை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது சென்னையின் முக்கிய போக்குவரத்து தடமாக விளங்கும் அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலையில் புதிதாக நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் காவலர்கள் இல்லாவிட்டால், சாலைவிதிகளை மீறுவதை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில் கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அண்ணாநகர் பகுதியில் திருமங்கலம், சாந்தி காலனி சந்திப்பு உள்ளிட்ட 5 முக்கிய சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனைதொடர்ந்து அதிக அளவில் போக்குவரத்து விதிமீறல்கள் நடக்கும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் காமராஜர் சாலையில் போக்குவரத்து விதி மீறல் அதிகளவில் நடப்பது தெரிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அண்ணாசாலை உள்ளது. எனவே,  இந்த சாலைகளில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் காமராஜர் சாலையில் கேமராக்கள் வைக்கப்படும். எந்த, எந்த இடத்தில் வைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதற்கான பணியில் தீவிரம் காட்டி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: