போதைக்கு அடிமையாவதால் மாவட்டத்தில் சரிகிறது மாணவர் தேர்ச்சி விகிதம் இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு

விருதுநகர், ஜன. 21: பள்ளி, கல்லூரிகள் அருகே, போதைப்பொருட்கள் விற்பனை அதிகரிப்பதால், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி, மாவட்ட தேர்ச்சி சதவீதம் சரிவதாக இந்திய மாணவர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் மனு அளித்து கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனால், படிப்பதில் இருந்து கவனம் திசை திரும்பி உள்ளது. போதையினால் சுயநினைவுகளை இழந்து திருடுதல், ஆசிரியர்களை மதிக்காமல் இருத்தல், குழந்தைகளை பாலியலுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போதைக்கு அடிமையானதால் மாவட்ட தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது. மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து ஒழுக்கமான சூழல் உருவாக போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு 100 மீட்டர் வரை புகையிலை விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: