மாவட்டம் கண்களை கவரும் பலூன் அரிய ஆபரேசனை அசத்தலாக முடித்த ஜிஹெச் டாக்டர்கள்

மதுரை, ஜன.21: மதுரை அரசு மருத்துவமனையில் மூச்சுக்குழாய் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த விவசாயி கேசவன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலைக்கு முடிவு செய்து, பூச்சிக் கொல்லி மருந்தை குடித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்றார். நீண்டநாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் மூச்சு விடுவதில் பெரும் சிரமத்திற்குள்ளானார். இதனால் கேசவன் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இங்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில், அவரது மூச்சுக்குழாயில் புண் ஏற்பட்டு சுருங்கி இருப்பது தெரியவந்தது. புண்ணாகி உள்ள மூச்சுக்குழாயின் பகுதியை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இருதய நெஞ்சக அறுவை சிகிச்சை பிரிவின் துறைத்தலைவர் மார்வின் மனோவா பேலிஸ், இத்துறையின் முன்னாள் தலைவர் ரத்தினவேல் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி தனி மருத்துவக்குழு அமைத்தனர். இக்குழுவினர் நடத்திய அறுவை சிகிச்சை 3 மணி நேரம் நடந்தது. இதில் கேசவனின் மூச்சுக்குழாயில், புண்ணால் பாதிக்கப்பட்ட பகுதி அகற்றப்பட்டு, மூச்சுக்குழாய் இணைக்கப்பட்டது. மூச்சுக்குழாயின் ஒரு பகுதி வெட்டி அகற்றப்பட்டு, மீண்டும் மூச்சுக்குழாய் இணைக்கப்பட்டது அரியவகை அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக்குழுவினருக்கு டீன் சங்குமணி பாராட்டு தெரிவித்தார்.   

Related Stories: