ஊத்தங்கரையில் கோயிலுக்குள் புகுந்து வெறி பூசாரி கொலையில் போலீசார் திணறல்

கிருஷ்ணகிரி, ஜன.21:  ஊத்தங்கரை அருகே கோயிலுக்குள் புகுந்து பூசாரியை வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், துப்பு துலக்க முடியாததால் போலீசார் திணறி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி சரட்டூர் கிராமம் வாத்தியார் கொட்டாய் பகுதியில் உள்ள சிவன் கோயில் பூசாரியான முருகன்(55). கடந்த 1ம் தேதி மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு கோயிலுக்கு வெளியே சடலமாக கிடந்தார். இந்த கொலை குறித்து முருகனின் மனைவி வள்ளி(50), கொடுத்த புகாரின் பேரில் சாமல்பட்டி போலீசார் பூசாரி முருகனின் சடலத்தை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பூசாரி முருகன் மாந்திரீகம், வசியம் மற்றும் அருள்வாக்கு கூறி வந்துள்ளார். அதனால், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அந்த கோயிலுக்கு மக்கள் அதிகளவில் வந்து சென்றுள்ளனர்.

பூசாரி முருகன் மாந்திரீகம், வசியம், அருள்வாக்கு கூறியதில் ஏமாற்றமடைந்தவர்கள் யாராவது இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது மாந்திரீக தொழில் போட்டியால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், இந்த கொலை நடந்து 20 நாட்களான நிலையில், கொலைக்கான காரணம் குறித்து போலீசாருக்கு இதுவரை எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. மேலும், இந்த கொலை சொத்து தகராறு பிரச்னையால் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் தற்போது  விசாரணையை முடுக்கியுள்ளனர். கொலையாளிகள் குறித்து எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொலை நடந்து 20 நாட்களாகியும் இதுவரை கொலையாளிகளை போலீசார் பிடிக்கவில்லை. இதனால், போலீசார் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இச்சம்பவத்தில் தனிப்படை அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தனிப்படை போலீசார் இதுவரை கொலையாளிகளை பிடிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுத்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என்றனர்.

Tags : priest ,
× RELATED ஊத்தங்கரையில் கோயிலுக்குள் புகுந்து...