×

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி ஊழியர் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதற்கான ஆயத்தமாக, நேற்று நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு, வங்கி ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன பொறுப்பாளர் ஹரிராவ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கிளை செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். வாரம் 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பென்ஷனை ஒவ்வொரு ஒப்பந்தத்தின் போதும் உயர்த்த வேண்டும். வங்கி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில், 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி முன்பு, ஸ்டேட் பாங்க் ஊழியர் சங்க உதவி பொது மேலாளர் சந்தோஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Bank employees ,
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...