கோவை, ஜன.12: கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் நடந்த ஏலத்தில் இலை ரக தேயிலை மற்றும் தேயிலை தூள் விலை சரிவை சந்தித்தது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் தேயிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏலதாரர்கள் கலந்துகொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர். அதன்படி, தேயிலை வர்த்தக மையத்தில் இந்த வாரத்திற்கான ஏலம் நடந்தது.
ஏலத்திற்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 223 கிலோ தேயிலை தூள் விற்பனைக்கு வந்தது. 2 லட்சத்து 61 ஆயிரத்து 191 கிலோ தேயிலை தூள் விற்பனையானது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் 79 சதவீதம் ஏலம் போனது. இதில் 45 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு கிலோ தேயிலை தூள் சராசரியாக ரூ.94.60 க்கு விற்பனையானது. கடந்த வாரத்தில் நடந்த ஏலத்தை காட்டிலும் தேயிலை தூள் விலை கிலோவுக்கு 58 காசுகள் குறைந்தது. அதேபோல், இலை ரக தேயிலை ஏலத்தில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 285 கிலோ இலை ரக தேயிலை விற்பனைக்கு வந்தது. 1 லட்சத்து 31 ஆயிரத்து 910 கிலோ ஏலம் போனது. சுமார் 68 சதவீத விற்பனை நடந்தது. இதில் 34 ஏலதாரர்கள் கலந்துகொண்டனர்.ஒரு கிலோ இலை ரக தேயிலை ரூ.93.47 க்கு விற்பனையானது. கடந்த வாரம் இலை ரக தேயிலை கிலோ 94.82க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் கிலோவுக்கு ரூ. 1.35 அளவிற்கு சரிவை சந்தித்தது.