மாநகராட்சி 6வது மண்டலத்தில் பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பூர்: மாநகராட்சி 6வது மண்டலத்தில் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிகுள்ளாகின்றனர். சென்னையில் அதிகரித்துவரும் கொசுத் தொல்லையை போக்க வாரத்தில் இரண்டு நாட்கள் மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து மாநகர கமிஷனர், மாநகராட்சிக்கு உட்பட்ட எந்த இடத்திலும் கழிவு நீர் தேங்கக்கூடாது. கொசு உற்பத்தி ஆகக்கூடாது என அனைத்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.  சமீபத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னையில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில்  செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து  அதிகாரிகளை முடுக்கிவிட்ட மாநகராட்சி நிர்வாகம் அடுத்த பணிக்கு சென்றுவிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வட சென்னையில் பல பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 புளியந்தோப்பு, திருவிக நகர் 6வது மண்டலத்துக்கு உட்பட்ட 77வது வார்டில் கே.பி.பார்க் ஆயில் மில் சாலையில் பல மாதங்களாக சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ஓரிடத்திலிருந்து கழிவுநீர் வெளிவரத் தொடங்கி சாலை முழுவதும் வந்து மற்றொரு மேன்ஹோல் வழியாக செல்கிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் அருகில் உள்ள சிறிய கம்பெனிகள் மற்றும் 100 மீட்டர் தொலைவில் உள்ள அம்மா உணவகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் என பலரும் தினம்தினம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும் தினமும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்து சாலையை சுத்தம் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: