ஏற்காட்டில் 107வது நினைவு தினம் அனுசரிப்பு வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் கல்லறையில் குடும்பத்தினர் அஞ்சலி

ஏற்காடு, டிச.30:  ஏற்காட்டில், பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்டின் 107வது நினைவு தினம் அவரது கல்லறையில் அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் பழங்கால வரலாற்றின் தந்தை என போற்றப்படுபவர் ராபர்ட் புரூஸ் பூட். இவர், 1863ம் ஆண்டு மே 30ம் தேதி சென்னை, பல்லாவரம் பகுதியில் உள்ள திரிசூலம் மலையில் கல் கோடாரி ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர், 1863ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அத்திரபாக்கம் கொற்றலை ஆற்றுப்படுக்கையில் முதுமக்கள் தாழி, பானைகள், கற்கால வெட்டு கற்கருவிகளை கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இவரின் இந்த அரிய கண்டுபிடிப்பு, பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்திய துணைக்கண்டத்திலும் இருந்தது என தெரியவந்தது.

மேலும், இவர் 1884ம் ஆண்டு 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும் குகையை கண்டுபிடித்தார். இது இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான குகையாகும். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது.

இவரின் கண்டுபிடிப்புகளை சென்னை அருங்காட்சியகம் காட்சிக்கு வைத்துள்ளது. ராபர்ட் புரூஸ் பூட் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஐவி காட்டேஜில் வாழ்ந்து வந்தார். இவர், 1912ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி கொல்கத்தாவில் மரணமடைந்தார். அங்கிருந்து அவரது உடல் ஏற்காட்டிற்கு எடுத்து வரப்பட்டு, ஹோலி டிரினிட்டி சர்ச் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது 107வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ, பெனட் வால்ட்டர், ஓவியர் ராஜ்கார்த்திக், ஓவியர் மனோ, ஜார்ஜ் டிமிட்ரோவ், தில்லைக்கரசி மற்றும் குடும்பத்தினர் ராபர்ட் புரூஸ் பூட் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: