போதைக்கு எதிராக விழிப்புணர்வு பயணம் பஞ்சாப் மாற்றுத்திறனாளிக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு

கிருஷ்ணகிரி, டிச.27:  போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பஞ்சாப் மாற்றுத்திறனாளி நேற்று கிருஷ்ணகிரி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்தவர் குல்தீப் ராதோடு(53). போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான இவர், கடந்த 2008ம் ஆண்டு தனது மனைவியின் மறைவிற்கு பிறகு போதை பொருட்களுக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து பேட்டரியால் இயங்க கூடிய மோட்டார் சைக்கிளில்  பயணத்தை துவங்கிய அவர் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களை கடந்து நேற்று தமிழகம் வந்தார். ஓசூரில் இருந்து நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தடைந்த குல்தீப் ராதோடுவிற்கு சென்னை பைபாஸ் சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் அருகில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வரவேற்பளித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், இளைஞர்கள் போதை பொருட்களால் வாழ்க்கையை சீரழித்து விடக்கூடாது என்பதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறேன். மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். கடந்த 2010-14ம் ஆண்டு வரை தொண்டு நிறுவனம் மூலம் விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் உரிமைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்  40 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன். தற்போது போதை பொருட்களுக்கு எதிரான பயணத்தை தொடங்கி உள்ளேன். தொடர்ந்து சபரிமலை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Related Stories: