எர்ணாவூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து வீணாகும் குடிநீர் : அதிகாரிகள் மெத்தனம்

திருவொற்றியூர்: எர்ணாவூர்  குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் பைப்லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ஆனால், இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூர் ஆல் இந்திய ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்கள் ஆகியோருக்கு மாற்று குடியிருப்பாக வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.    இவர்களுக்கு புழல் ஏரியில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு,  குடியிருப்புக்கு அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி பின்னர், மோட்டார் மூலம் குடியிருப்பின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்பட்டு குடியிருப்புவாசிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இங்குள்ள பைப்லைன் உடைந்துள்ளதால் அதன் வழியாக குடிநீர் வெளியேறி குடியிருப்பு நுழைவாயிலில் குளம் போல் தேங்குகிறது. இதனால், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் வீணாக வழிந்தோடி வருகிறது. மேலும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் குடியிருப்பு கட்டிடத்தில் கசிகிறது. பல நாட்களாக உள்ள இப்பிரச்சினை குறித்து திருவொற்றியூர் குடிநீர் வழங்கல், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் ஆகியோரிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வட சென்னையில் குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் மெத்தனம் காரணமாக இந்த பகுதியில் குடிநீர் வீணாகிறது. மேலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள குழாய்களை பழுதுபார்க்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குடிநீர் வீணாகி வருவதோடு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறோம்,’’ என்றனர்.

Related Stories: