திருமயம்: திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடப்பட்ட மரக்கன்றுகள் நீரின்றி கருகும் அவலம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சியிலிருந்து புதுக்கோட்டை, திருமயம் வழியாக காரைக்குடிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்னர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. அதற்கு முன் இருந்த மாநில நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் புளியமரம், வாகை மரம், வேம்பு உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான மரங்கள் சாலைகளை அலங்கரித்தது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்ட பின்னர் சாலையோரம் இருந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு சாலை அகலப்படுத்த ப்பட்டது. அப்போது சமூக ஆர்வலர்களிடையே இந்த நிகழ்வு பெரும் துயரத்தில் ஏற்படுத்தியது. அதேசமயம் அப்பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை 10 ஆண்டுகளுக்கு மேல் காலம் கடத்தி வந்தது . இதனிடையே கடந்த ஆண்டு திருமயம் பகுதியில் உள்ள மாவட்ட மாநில, நெடுஞ்சாலைகளில் இருபுறமும் சம்பந்தப்பட்ட துறையினர் மரக்கன்று நட்டு பராமரித்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் திருமயம் பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பாதுகாப்பு கூண்டு வெளியுடன் கூடிய பல்லாயிரக் கணக்கான மரக் கன்றுகள் நடப்பட்டது. இதனை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருமயம் பகுதியில் மழை பெய்யாததால் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மரக்கன்றுகள் பராமரிப்பின்றி காய தொடங்கியது. மேலும் மரக்கன்றுகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகளும் ஆங்காங்கே சேதமடைந்து சாய்ந்து கிடப்பதால் மரக்கன்றுகள் கால்நடைகளுக்கு இறை ஆகிறது. தற்போது திருமயம் பகுதியில் தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் ஓரிரு வாரங்களில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள மரக்கன்றுகள் அனைத்தும் நீரின்றி வரண்டு கருகும் நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடப்பட்டு உள்ள மரக்கன்றுகளை பாதுகாக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் மரக்கன்றுகள் பாதுகாப்பதுடன் பல லட்சம் செலவு செய்து நடப்பட்ட மரக்கன்றுகள் வரட்சியினால் கருகி அழிவதில் இருந்து காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்….
The post திருமயம் பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடப்பட்ட மரக்கன்றுகள் நீரின்றி கருகும் அவலம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.