ஓசூர் பகுதியில் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்

ஓசூர், டிச.16: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனை பயன்படுத்தி தக்காளி, பீன்ஸ், முட்டை கோஸ், கேரட், பீட்ருட், வெள்ளரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களையும், சாமந்தி, ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட மலர் செடிகளையும், புதினா, கொத்தமல்லி உள்பட பல்வேறு கீரை வகைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள் முழுக்க முழுக்க சொட்டுநீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர். இதன்மூலம் நல்ல விளைச்சலுடன், கூடுதல் வருவாயும் கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தண்ணீரை சேமிக்கும் வகையில் சொட்டுநீர் பாசனத்திற்கு மாற வேண்டும் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஓசூர் அருகே வற்றாத ஜீவநதியான தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இதன் குறுக்கே கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இருந்தாலும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தையே விரும்புகிறார்கள். எனவே, சொட்டுநீர் பாசன விவசாயிகளை அரசு ஊக்கவிக்க வேண்டும். சொட்டுநீர் பாசனத்தின் மூலம் பயிர்கள் நடுவில் வரும் களை குறைக்கிறது.

பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சும் முறையில் மண்வெட்டி பயன்படுத்தும்போது பெருமளவில் தண்ணீர் வீணாகிறது. அதேவேளையில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக குறைந்தது 3 மணி நேரம் பிடிக்கிறது. சொட்டுநீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சும்போது விரயமாவது கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், இரண்டுபோகம் விவசாயம் செய்யலாம். உரம், மருந்து உள்ளிட்டவை வீணாகாது. எனவே, தற்போதைய நிலைக்கு சொட்டுநீர் பாசனம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஓசூர் பகுதியில் கெலவரப்பள்ளி அணை அருகிலுள்ள புனுகன்தொட்டி, கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, சித்தனப்பள்ளி, தொரப்ள்ளி, திருச்சிப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறி வருகின்றனர் என்றனர்.

Related Stories: