விளை நிலங்களில் ஏரி நீர் புகுந்த விவகாரம் விவசாயிகள் மோதல் முடிவுக்கு வந்தது

கெங்கவல்லி, டிச.13:  வீரகனூரில் தடுப்பணை கட்டியதால், விளை நிலங்களில் தண்ணீர் புகுந்த விவகாரத்தில், அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இரு தரப்பு விவசாயிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த வீரகனூர் ஏரி முறையாக தூர்வாராததால், மதகுகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறி சுவேத நதிக்கு சென்றது. இதனால், விவசாயிகள் ஒன்றிணைந்து மணல் மூட்டைகள் கொண்டு தடுப்பணை அமைத்து நீரைத் தேக்கினர். இதனால், அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட வெள்ளையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தடுப்பணையை உடைக்க வேண்டும் என ராயர்பாளையம் விவசாயிகளிடம் கூறினர். அவர்கள் மறுப்பு தெரிவித்ததால், மோதல் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பு விவசாயிகளையும் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தார். இந்நிலையில், நேற்று ஆத்தூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சாந்தகுமார் மற்றும் வீரகனூர் காவலர் ஆய்வாளர் ராமாண்டவர், வருவாய் ஆய்வாளர் சங்கரி முன்னிலையில், வெள்ளையூர் மற்றும் ராயர்பாளையம் விவசாயிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், ராயர்பாளையத்தில் கட்டப்பட்ட ஒரு அடி உயர தடுப்பணையை அகற்றுவது, வீரகனூர் பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள கடைக்கோடி பகுதியில் உடைப்பு ஏற்படுத்தி வெள்ளையூர் பகுதிக்கு தண்ணீர் விடுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இதனால், விவசாயிகளுக்கிடையே நிலவி வந்த பிரச்னை முடிவுக்கு வந்து, வீரகனூர் பகுதியில் நிலவி வந்த பரபரப்பு அடங்கியது.

Advertising
Advertising

Related Stories: