கிருஷ்ணகிரியில் பூண்டு விலை கிடு கிடு உயர்வு

கிருஷ்ணகிரி, டிச.13: கிருஷ்ணகிரியில் பூண்டு விலை கிடு கிடுவென உயர்ந்து ஒரு கிலோ ₹200 வரை விற்பனையாகிறது.  தமிழகத்தில் ஏற்கனவே வெங்காய விலை எகிறியதாக, வெங்காயம் வாங்குவது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு நகைச்சுவை பதிவுகளை பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். வெங்காய பிரச்னை ஒரு பக்கம் இருக்க தற்போது பல்வேறு உணவு பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ பூண்டு ₹60 லிருந்து 70 வரை விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது 200ஐ தொட்டுள்ளது. இதனால் பூண்டு அதிகம் பயன்படுத்தும் உணவு பொருட்களை சமைப்பதை மக்கள் குறைந்துள்ளனர். மேலும் பூண்டின் விலை அதிகமாகும் அபாயமும் உள்ளது. இது குறித்து பூண்டு வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, நமது மாவட்டத்திற்கு பூண்டு வரத்து அதிகமாக இருந்தது.

தற்போது ஏதோ காரணத்திற்காக பூண்டு வரத்து குறைந்துள்ளது. தற்போது மண்டியில் தேக்கி வைத்திருக்கும் பூண்டுகளை மட்டுமே அதிக விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறோம். புதிய பூண்டு வரத்து தொடங்கியதும்தான் விலை குறையும். இந்த நிலை தொடர்ந்தால் பூண்டின் வில மேலும்அ அதிகரிக்கும் நிலையே உள்ளது என்றார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது. 30 ரூபாய்க்கு விற்பனை செய்த மல்லி ₹105க்கும், ₹50க்கு விற்ற முருங்கைக்காய் ₹200 வரைக்கும், சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 100 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் அதிகபட்சமாக ₹100க்கும், கேரட் ₹65 என பல மடங்கு அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்த உணவு பொருட்களை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள், உணவகங்கள் நடத்தி வருபவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Related Stories: