ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட 3வது நாளில் 1,213 பேர் வேட்புமனு தாக்கல்

சேலம், டிச.12: சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளில் போட்டியிட 3வது நாளில் 1,213 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில்,சென்னை மற்றும் 9 மாவட்டங்களை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படவுள்ளது. சேலம் மாவட்டத்தில், 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4,299 பதவிகளுக்கு, வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது.

முதல்நாளில் மாவட்டம் முழுவதும் 309 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் 138 பேர் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 3வது நாளாக நேற்று மனுக்கள் பெறப்பட்டன. நேற்று ஒரேநாளில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 34 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 253 பேர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 923 பேர் என மொத்தம் 1,213 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் இதுவரை, 1,660 பேர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு காரணமாக, அரசியல் கட்சியினர், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று அறிவித்தபடி தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், இன்று கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: