மதுரை மாவட்டத்தில்ஊராட்சி தலைவர் பதவிக்கு 23 பேர் மனுதாக்கல்

மதுரை, டிச.10: மதுரை மாவட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 23 பேரும், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 81 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.  மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று 13 ஒன்றியங்களில் துவங்கியது. காலை 10 மணிக்கு துவங்கிய வேட்பு மனு தாக்கல் மாலை 5 மணி வரை நடந்தது. முதல்நாளான நேற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மதுரை கிழக்கில் 8 பேரும், மேற்கில் 2, திருப்பரங்குன்றம், மேலூர், வாடிப்பட்டி, கள்ளிக்குடி ஒன்றியத்தில் தலா 1, அலங்காநல்லூரில் 3, சேடபட்டியில் 6 என மொத்தம் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.  இதே போன்று ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு 81 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் துவங்கிய நேற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் அலைமோதியது. மதுரை கிழக்கு ஒன்றியத்தில் அதிகமான கூட்டம் இருந்ததால், போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல முயன்றதால், போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.

 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த இரண்டு பதவியும் கட்சி சின்னத்தில் தேர்தல் நடத்துவதால், அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள திமுகவை சேர்ந்த சூரியகலா கலாநிதி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பு மனுவை வாங்கி சென்றுள்ளனர்.  மேலும், சுயேட்சையாக போட்டியிடுவோரும் மனு தாக்கல் செய்யவில்லை.  தேர்தலை எதிர்த்து எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக ஒரு முடிவு தெரிந்த பின்பு, வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என சுயேட்சையாக போட்டியிட உள்ள வேட்பாளர்கள் கூறினர்.

Related Stories: