சோதனையில் அதிர்ச்சி 210 பேரில் 43 பேருக்கு காசநோய்

மதுரை, டிச. 10: மதுரை மாவட்டத்தில் நடந்த காசநோய் முகாமில் 210 பேருக்கு நடந்த சோதனையில் 43 பேருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   மதுரையில் காசநோய் கண்டறியும் முகாம், திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்தது. மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் சுபையர் ஹஸன் முகமது கான் தலைமையில், கடந்த 2ம் தேதி முகாம் துவங்கியது. காசநோய் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று, காசநோய் அறிகுறி உள்ளவர்களிடம் இருந்து சளி மாதிரிகளை பெற்று பரிசோதனை செய்தனர். மேலும் கிராம பகுதிகள், கல்குவாரிகள்,  காட்டன் மில், இரும்பு பட்டறைகள், அகதிகள் முகாம், முதியோர் இல்லம் மற்றும் அனைத்து வகையான தொழிற்சாலை பணியாளர்கள் உள்ள இடங்களை கண்டறிந்து அவர்களுக்கு காசநோய் உள்ளதா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் டிஜிட்டல் எக்ஸ்ரே வேன்கள் மூலம் சென்று 210 பேருக்கு காசநோய் உள்ளதா என்று நெஞ்சு படம் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அதில் 43 பேருக்கு காச நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது.

Related Stories: