கிருஷ்ணகிரியில் கடும் பனிப்பொழிவு

கிருஷ்ணகிரி, டிச.10: கிருஷ்ணகிரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக காலையில் பனிமூட்டம், பகலில் வெயில், இரவில் கடும் குளிர் என மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருகிறது. அதிகாலையில், கடும் பனிப்பொழிவு ஏற்படுவதால், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், சாலையோர கடை வைத்துள்ள வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். பனியின் தாக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல், மாறுபட்ட சீதோஷ்ணத்தால், சளி, காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.அதே போல், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. தற்போது, மழை குறைந்துள்ள நிலையில், அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவுகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி படர்ந்திருப்பதால், காலையில் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

Related Stories: